தானதர்மத்தில் கிடைக்கும் பலன்கள் !
தீர்த்தங்களில் ( அதாவது, புண்ணிய நதிகளில் ) ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்ககள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும் . கங்கையில் ஸ்நானம் செய்வதும், காசி விஸ்வநாதர் தரிசனமும் முக்திக்கு வழி .
பிரசித்தி பெற்ற இடம் பிரயாகை . இது, அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது . இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகின்றது . இதற்கு தனிப்பெருமை உண்டு . அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது . இந்த இடத்தை, திருவேணி சங்கமம் என்றும் கூறுவர் . கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம் .
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம் . இந்த பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு .
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து, தான தர்மங்கள் செய்யவேண்டும் . இந்த இடத்தில் கோதானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ, அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
எந்த தானம் கொடுத்தாலும், அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்கவேண்டும் . தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும் .
கோதானம் கொடுப்பது என்றால், நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து ( இளங்கன்று சிறந்தது ) பசுவுக்கு அலங்காரம் செய்து, கொம்பில் கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும் . கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலனில்லை .
--- வைரம் ராஜகோபால் , ஞானானந்தம் தொடரில் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).
No comments:
Post a Comment