Saturday, June 5, 2010

மிளகாய் !

பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டு பரவிய முக்கிய பொருள் மிளகாய் . நாம் சுவைத்து மகிழ்கிற மிளகாய்க்கும் , நமக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிற விவரம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவோம் . மிளகாய் புழக்கத்துக்கு வரும்வரை மிளகுதான் காரத்திற்குக் காரணமாக இருந்தது . இந்தியாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஐரோப்பியர்கள் ஆசைப்பட்டதே நமது நறுமணப் பொருள்களுக்காகத்தான் .
உலகத்திலேயே காரமானது , அஸ்ஸாமிலே விளைகிற ' நாகஜோலோக்கியா ' என்கிற ஒருவகை மிளகாய்தான் . அதில் 8,55,000 ஸ்கோவில் யூனிட் கேப்சைசின் இருக்கிறது .
முதன்முதலில் ஐரோப்பியர்களுக்கு மிளகாய் அறிமுகமானது கொலம்பஸின் பயணத்தின்போதுதான் . அவர் அமெரிக்காவிற்குச் சென்றபோதே ' ஆஸ்டெக் ' மக்கள் பலவிதமான மிளகாய் ரகங்களைப் பயிரிடுவதைப் பார்த்தார் . அவர்கள் காரத்தின் தன்மையைப் பொறுத்து மிளகாய்களை வகைப்படுத்தியதும் தெரிந்தது .
மிளகாயை எது முதலில் மனிதர்களைச் சுவைக்கத் தூண்டியது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது . அனேகமாக மருத்துவக் குணங்களுக்காகத் தான் அதை மனிதன் முதலில் கடித்திருக்கக்கூடும் . அளவான மிளகாய் பல வியாதிகளுக்கு மருந்தாக முடியும் என்பதை இன்று விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள் . கேன்சரைக்கூட அது தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது .
கொலம்பஸ் , அவற்றின் காரம் மிளகின் காரத்தைப் போலவே இருப்பதை அறிந்து அதைச் ' சில்லி பெப்பர் ' என்றழைத்தார் . உலகத்தில் அதிகமாக மிளகாயை உற்பத்தி செய்கிற நாடு இந்தியாதான் .இருபத்தைந்து சதவிகிதத்தை இந்தியாவே பயிரிடுகிறது .
--- வெ. இறையன்பு . புதிய தலைமுறை .டிசம்பர் 17 . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: