Thursday, September 30, 2010

சோதனைகள் ?

மூன்று வாசல் சோதனைகள் ?
புத்த பிட்சுக்கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள் . அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் . ' அந்த வார்த்தைகள் உண்மையானவைதானா ?' என்பது முதல் வாசல் கேள்வி . இந்தக் கேள்விக்குப் பதில் ' ஆம் ' என்றால்தான் , அடுத்த வாசலுக்குச் செல்ல முடியும் . இரண்டாவது வாசலில் , ' இந்த வார்த்தைகள் அவசியம் தானா ? ' என்பது கேள்வி . அந்தக் கேள்வியையும் கடந்த பிறகு ' அந்த வார்த்தைகள் கனிவானவையா ? ' என்பது மூன்றாவது வாசல் கேள்வி . இந்த மூன்று வாசல்களையும் கடந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டும்தான் அவர்கள் உச்சரிப்பார்கள் . நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் இல்லாவிட்டாலும் , கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையேனும் இந்த மூன்று வாசல்கள் வழி அனுப்பலாமே !
---- கி. கார்த்திகேயன். ஆ. விகடன் , 14. 04. 2010..

நடிகை மரணம் .

' டைட்டானிக் ' மூதாட்டி நடிகை மரணம் .
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் சான்டா மோனிகா நகரில் 1910 ம் வருடம் பிறந்தவர் குளோரியா ஸ்டூவர்ட் . 1912 ம் ஆண்டு நடந்த டைட்டானிக் கப்பல் விபத்தை படமாக்க இயக்குனர் ஜேம்ஸ் கேமரான் திட்டமிட்டபோது,, வயதான கேட் வின்ஸ்லெட்டாக ( ரோஸ் ), கடல் நீரில் நெக்லஸை நழுவ விட்ட 101 வயது பாட்டியாக நடித்தவர் குளோரியா ஸ்டீவர்ட் . இந்த படத்தில் நடிக்கும்போது குளோரியாவுக்கு 87 வயது . ஆனால், படத்தில் 101 வயது மூதாட்டியாக கூடுதல் மேக்கப் போட்டுக்கொண்டார் குளோரியா . தற்போது தனது 100 -வது வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஞாயிறு இரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார் .
--- தினமலர் & தினகரன் -- 29 / 9 / 2010

Tuesday, September 28, 2010

வேண்டுதல் !

" கடவுளிடம் வேண்டுபவர்கள் தங்களுக்காகத்தானே வேண்டிக்கொள்கிறார்கள் ?"
மாறுதலான வேண்டுதலும் உண்டு. பாரதியார் ஒரு தடவை தனது மனைவி செல்லம்மாவுடன் மிருகக் காட்சிச் சாலைக்குச் சென்றாராம். அப்போது ஒரு கூண்டில் இருந்த சிங்கத்திடம், கூண்டுக் கம்பி வழியே கையை உள்ளே நீட்டி, ' சிங்கராஜனே.....இதோ கவிராஜன் வந்திருக்கிறேன் ' என்று சொல்லி சிங்கத்தைச் சீண்டினாராம் பாரதி. அப்போது செல்லம்மாள், ' கடவுளே, அந்த சிங்கத்துக்கு நல்ல புத்தியைக் கொடு ! ' என்று வேண்டிக்கொண்டாராம் ! .
---நானே கேள்வி...நானே பதில் ! ஆ. விகடன் , 14. 04. 2010.

Monday, September 27, 2010

பகத்சிங் !

பகத்சிங் பிறந்த நாள் செப்டம்பர் 27 .
அப்பொழுது 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு 20 நாட்களுக்கு முன்பு பகத்சிங் குடும்பத்தினர் அவரைப் பார்க்க வருகிறார்கள் . அதுதான் குடும்பத்தினருடனான கடைசி சந்திப்பு . கடைசியாக விடைபெற்றுப் போகிறபோது பகத்சிங்கின் தம்பி குல்தாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை . ஆனால், அவனுடைய தாய், ' உன்னைத் தூக்கில் போடும்போது நீ, புரட்சி ஓங்குக என்று முழக்கம் செய் ' என்று சொல்கிறார் .
குறித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே ( மார்ச் 23, 1931 மாலை ) பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்படுகிறார்கள் . முன்னதாகத் தூக்கிலிடப்படும் செய்தி குடும்பத்திற்குத் தெரியாது . அவர் தூக்கிலிடப்பட்ட மறுநாள் அதிகாலையில் அவர்கள் சிறைக்கு வந்து அவரைக் கடைசிமுறையாகக் காணக் காத்திருக்கிறார்கள் .
அவரது சாம்பல் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை . சட்லெஜ் நதியில் அது கரைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள் . ஆனால், உண்மையில் முழு உடலும் எரியும் வரை காத்திருக்காமல் அவரது உடல் கோடரியால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது .
தூக்கிலிடப்பட்டபோது பகத்சிங்கின் வயது 23 . அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் : " என் முகத்தை கருப்புத்துணியால் மூடாதீர்கள் . என் மூச்சு நிற்கும் வேளையில் என் தாய்மண்னைப் பார்த்தவாறே மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் ."
--- புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி

யானைக்கு வழி விடுங்கள் .

ஒரே நேரத்தில் ஏழு உயிர்களை பறித்த ஆளை எந்த சட்டத்தின் கீழ் தண்டிப்பது ? கவனக் குறைவாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியதாக ரயில் டிரைவர் மீது புகார் கொடுத்துள்ளது வனத்துறை . மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த ஏழு யானைகளை மோதி கொன்ற சரக்கு ரயில் டிரைவர் .
அது காட்டு பகுதி . இரவு மணி பத்தரை . இருட்டுதான் . ஆனால், மரங்களோ புதரோ மறைக்காததால், இஞ்சின் லைட் வெளிச்சத்தில் ரயில் பாதை நன்றாகத் தெரியும் . டிரைவர் பார்த்திருந்தால் தண்டவாளத்தின் நடுவில் இரண்டு குட்டி யானைகள் விழுந்து கிடப்பதும், ஐந்தாறு யானைகள் வட்டமாக சுற்றி நின்று தூக்கிவிட முயன்று கொண்டிருப்பதும் தெரிந்திருக்கும் . பிரேக் போட்டிருப்பார் . மூன்று பெண், மூன்று குட்டிகள், ஒரு ஆண் என ஏழு யானைகள் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து மோதிய சரக்கு ரயிலில் அடிபட்டு துண்டு துண்டாக சிதறியிருக்காது .
' ஸாரி..' சொல்லக்கூட ரயில்வேக்கு மனம் வரவில்லை . அந்த இடத்தில் அந்த நேரத்தில் யானைகள் வரும் என முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று வனத்துறை மீது பழி போடுகிறது . விலங்குகள் குறுக்கே வரக்கூடிய பகுதிகள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது . அங்கு ரயிலின் வேகம் 50 கி. மீ. தாண்டக்கூடாது . இருந்தும் 20 ஆண்டுகளில் 150 யானைகள் இப்படி பலியாகியுள்ளன . அதிக பட்சம் அசாம், அடுத்து மே. வங்கம், ஐந்தாவது தமிழகம் . தண்ணீருக்காக அலையும் கோடையில் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன . யானையை நண்பனாக நேசித்து கடவுளாக மதிக்கும் நாட்டுக்கு இது பெரும் களங்கம் .
உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும் குணத்தில் ஒரு குழந்தை போன்றது யானை . டால்பின், குரங்கு போன்று அது புத்தியுள்ள விலங்கு . நம்மை போல ரத்த பாசம் அதிகம் . விபது நடந்த மறுநாள் அதே நேரத்துக்கு 30 யானைகள் கூட்டமாக அங்கு வந்து அரை மணி நேரம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு, ஆக்ரோஷமாக பிளிறிக் கொண்டு அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்து துவம்சம் செய்தன . வனத்துறை அதிகாரிகள் குறுக்கிடவில்லை . கோபம் தணிந்ததும் அமைதியாக காட்டுக்கு திரும்பிவிடும் என்று அவர்களுக்கு தெரியும் .
--- தினகரன் , தலையங்கம் . செப்டம்பர் 26 , 2010 . ஞாயிற்றுக்கிழமை .

Saturday, September 25, 2010

' ANSI LUMINES'

எல். சி. டி. டி. எல். பி. புரஜெக்டர்களை வாங்கும்பொழுது அதன் ஒளியின் திறனைப் பார்த்து வாங்கவேண்டும் என்று சொல்கிறார்கள் . விளம்பரங்களில் கூட ' ANSI LUMINES ' என்று ஒரு அளவைக் குறிப்பிடுகிறார்கள் . அது என்ன ' ANSI ' ?
' அமெரிக்கன் நேஷனல் ஸ்டாண்டர்ட் இன்ஸ்டிடியூட் ' என்பதன் சுருக்கம்தான் 'ANSI '. அந்த நிறுவனம் மல்டி மீடியா புரஜெக்டர்களின் ஒளிரும் திறனின் அளவைக் கணக்கிட்டு சான்றிதழ் வழங்கும். அந்த சான்றிதழ் பெற்ற தயாரிப்புகளுக்கு சந்தையில் ஒரு மரியாதை உண்டு
பொதுவாக புரஜெக்டரில் இருந்து ஒளிக்கதிர்கள் திரையில் விழும்பொழுது அதன் மையப்பகுதியில் அதிகமாகவும், ஓரங்களில் குறைவாகவும் இருக்கும். அதனால் திரையில் விழும் ஒளியின் தன்மையை கணக்கிட ஒரு பொதுவான வழிமுறையை கையாளுகிறார்கள். ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் புரஜெக்டரில் இருந்து வரும் ஒளியானது எவ்வளவு திறனுடன் இருக்கிறது என்பதை அளவிடுவார்கள். அதற்கு அந்த ஒரு சதுரமீட்டர் பரப்பளவை ஒன்பது கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்தின் மையத்திலும் விழும் ஒளியின் அளவைக் கணக்கிட்டு, பின் ஒன்பது கட்டத்தின் சராசரி அளவை அந்த புரஜெக்டரின் ஒளிரும் திறனாக குறிப்பிடுவார்கள். ANSI -- 500 முதல் 5000 க்கு மேலும் இப்படி ஒளிரும் திறன் குறிப்பிடப்பட்டு புரஜெக்டரை நாம் பயன்படுத்தும் காரணம், இடம் அவற்றின் தன்மையைப் பொறுத்து நமக்கு தேவையான ஒளித்திறன் கொண்டபுரஜெக்டர்களை வாங்குவது நல்லது .'
--- இளையரவி , தகவல் தமயந்தி. குமுதம் 26. 05. 2010.

Friday, September 24, 2010

கூச்சம் .

பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரியமாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகிவிடும் . உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம் . ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. 'கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக்கொள்ளும் ஒரு குணம் ' என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். ' மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும் , கருணையாகப் பார்க்க வேண்டும் என்று உள்ளூக்குள் வேண்டி விரும்பியேபலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் . பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது . ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும் . நீங்கள் பயந்து ஒதுங்கும்போது உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள் ?
--- ஆ. விகடன் , 26. 05. 2010.

Thursday, September 23, 2010

பாரதிதாசன் .

சுப்புரத்தினம் -- பெற்றோர் வைத்த பெயர் . அப்பா பெயர் கனகசபை என்பதால் , கனக. சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைச்சூட்டிக்கொண்டார் . அவரது கவீதைகளுக்கு புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம் .
' வளையாபதி ' படத்துக்கு இவர் எழுதிக் கொடுத்த வசனத்தில் சில வரிகள் மாற்றப்பட்டதால் 40 ஆயிரம் பணத்தையும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களையும் தூக்கி எரிந்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கம்பீரமாக வெளியேறியவர் !
' உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுக்கிறேன் . எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன் ' என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார் . ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர் !
புதுச்சேரியில் ஒருமுறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூராவளி. ஒருமுழுநாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார். அவரது ' பறந்து திரிந்த ' அனுபவங்களைக் ' காற்றும் கனகசுப்புரத்தினமும் ' என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார் . அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர் !
நாடு முழுக்க நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. ' நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது ' என்ற அண்ணா, அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார் !
ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது , அவரை போலீஸுக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளி நாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர் !
' சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன் ' என்று பாரதியார் கேட்டுகொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், ' எங்கெங்கு காணினும் சக்தியடா ! '
பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார் . அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றவிடாமல் 15 பள்ளிகலுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள் . ' அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம், அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும் ?' என்று கொதித்தார்!
' அ ' என்றால் அணில் என்று இருந்ததை ' அம்மா ' என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான் இவர்தான் !
இசை , மெட்டு குறையாமல் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர் . தான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் தானே பாடுவார் . ' வீர சுதந்திரம் வேண்டி நின்றார் ' பாடலை இவர் பாடிக்கொண்டு இருக்கும்போதுதான் பாரதியார் இவரை முதன்முதலாகப் பார்த்தார் !
பழனியம்மாள் இவரது மனைவி. இவர்களுக்கு சரஸ்வதி, வசந்தா, ரமணி ஆகிய மூன்று மகள்களும், மன்னர்மன்னன் என்ற மகனும் உண்டு !
' வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை. நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் என்றும் நிலைக்கும். அதைத்தான் நான் செய்கிறேன் ' என்றவரின் உடல் புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது, திரண்ட கூட்டம் அவரது கவிதைகக்குக் கிடைத்த அங்கீகாரம். மயானக் கரையில்வைத்து அவ்வை டி. கே. சண்முகம் பாடினார்... ' துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இனபம் சேர்க்க மாட்டாயா ! '
--- ப. திருமாவேலன் . ஆ. விகடன் , 26. 05. 2010.

Wednesday, September 22, 2010

கணிதம் .

ஐந்தில் முடியும் எண்களின் வர்க்கத்தைக் கண்டுபிடிக்க ஈஸியான ஒரு வழி இருக்கிறது தெரியுமா...!
இந்த உதாரணங்களைக் கவனியுங்கள் :
15 ன் வர்க்கம் = 15 x 15 = 1 x ( 2 ) 25 = 225.
25 ன் வர்க்கம் = 25 x 25 = 2 x ( 3 ) 25 = 625 .
5-ல் முடியும் எண்களில், அதற்கு முன்பாக உள்ள எண்ணையும், அதன் அடுத்த எண்ணையும் பெருக்கி அருகில் 25 ஐ சேர்த்து எழுதினால் போதும் !
95ல் முன்பாக உள்ள எண் 9; இதன் அடுத்த எண் 10; 9ஐயும் 10ஐயும் பெருக்கினால் 90 ; இதை எழுதி அருகில் 25ஐ சேர்த்தால் 9025... இதுதான் 95ன் வர்க்கம் !
--- தினமலர் . ஏப்ரல் 16 . 2010.

Tuesday, September 21, 2010

ஐஸ்வர்யம் !

சிவத்துடன் சம்பந்தமுடையது சைவம் . விஷ்ணுவுடன் சம்பந்தமுடையது வைஷ்ணவம் . இதுபோல ஈஸ்வரனுடன் சம்பந்தமுடையது ஐஸ்வர்யம் . இங்கு இறைவனின் திருவருள் என்று பொருள் கொள்ள வேண்டும் . ஈஸ்வரனின் திருவருளினால் கிடைக்கும் எல்லாமே ஐஸ்வர்யம்தான் .
கோயிலில் கொடுக்கப்படும் திருநீறு, குங்குமம், துளசி மற்றும் ஒருவருக்கு அமையும் நல்ல பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், மாடு, கன்று, செல்வம், நோயின்மை, படிப்பு, நல்ல நண்பர்கள் எல்லாமே இறையருள் இருந்தால்தான் நன்றாக அமையும் . எனவேதான் இவை எல்லாவற்றையும் ஐஸ்வர்யம் என சாத்திரங்கள் கூறுகின்றன .
--- தினமலர் , இணைப்பு . ஏப்ரல் 1 . 2010.

சொர்க்கம் !

காவிரிக் கரையோர சொர்க்கம் !
கர்நாடகாவில் காவிரிக் கரையோரத்தில் உள்ள சோமாநாதபுரம் என்ற சிறு கிராமத்தில் மிகப்பிரமாண்டமான ஆன்மிகக் கலைக்கூடமாகக் காட்சியளீக்கிறது, பிரசித்தி பெற்ற கேசவர் திருக்கோயில் !
பெங்களூரில் இருந்து 140 கி. மீ., மைசூரில் இருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ளது , 16 முனை நட்சத்திர வடிவிலான இந்த பூலோக சொர்க்கம் . இதை கி. பி. 1268 ல் கட்டியவர், ஹொய்சால மன்னரான 3 ம் நரசிம்மனின் தளபதியான சோமநாதர் . இவரது பெயரே கிராமத்தின் பெயராகியுள்ளது . கோயில் உருவான வரலாற்றை, வாயிலில் உள்ள கன்னடக் கல்வெட்டு மிக விரிவாகத் தெரிவிக்கிறது .
கலைநுட்பம் நிறைந்த சுற்றுச்சுவர், 64 அறைகள் கொண்ட திறந்தவெளி திண்ணை மத்தியில் அமைந்துள்ள திருக்கோயிலில் கேசவர், ஜனார்த்தனர், வேணுகோபாலர் ஆகிய தெய்வங்களுக்கு கர்ப்பகிரகங்கள் உள்ளன கால சுழலில் கேசவர் விக்ரகம் மாயமாகிவிட்டது . மற்ற இரு தெய்வங்களுக்கும் அன்றாட பூஜை தொடர்கிறது . சுற்றுச் சுவரில் 194 சிற்பங்கள் உள்ளன . இந்த சிற்பங்களின் கீழ் சிற்பிகள் தங்களது பெயர்களைப் பொறித்திருப்பது ஒரு அதிசயம் !
தவம் செய்யும் விஷ்ணு, நடனமாடும் லக்ஷ்மி, வீணைமீட்டும் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்தி நிற்கும் பிரம்மா, ஐராவத யானையில் பயணிக்கும் தேவேந்திரன், கோயிலின் தெற்கு சுவரில் ராமாயணக் காட்சிகள், வடக்கு சுவரில் மகாபாரத காட்சிகள்... இப்படி நீண்டுகொண்டே போகும் அரிய சிற்பங்களின் கலைஅழகு சொல்ல மொழி போதாது !
--- தினமலர் , மார்ச் 21 2010..

Monday, September 20, 2010

அண்ணா .

* தலை சீவ மாட்டார் . கண்ணாடி பார்க்க மாட்டார் . மோதிரம் அணிந்ததில்லை . கைக்கடிகாரம் அணிய மாட்டார் . " என்னை காலண்டர் பார்க்கவைத்து, சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி " என்று சொல்லிக்கொண்டார் !
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் . மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தது .
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு . ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார் . " காலமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்களுக்கோ நித்திரை ... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை " என்பதே அந்தப் பேச்சு !
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது . சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது . தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியது ... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள் !
* ' எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ', ' கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ', ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ', ' கடமை -- கண்ணியம் -- கட்டுப்பாடு ', ' எங்கிருந்தாலும் வாழ்க ', ' மறப்போம் மன்னிப்போம் ', ' வாழ்க வசவாளர்கள் ', ' மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ', ' சட்டம் ஒரு இருட்டறை ', ' மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை !
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம் . 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன் , 1907 எகிப்து குடியரசுத் தலவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ் !
--- ஆனந்தவிகடன் , 17. 03. 2010 .

Sunday, September 19, 2010

இடதுபுறம் படுங்க !

இடதுபுறமாக ஒருக்களித்து படுத்து உறங்குவது ஆரோக்கியத்துக்கு உதவும் என்கிறது பழம் நூல்கள் . இடப்புறத்தில் தொப்புளுக்கு மேல் மார்புக்குழியின் கீழ் இருக்கும் பகுதிதான் ஜீரண உறுப்புகளின் முதற்பகுதியான இரைப்பை உள்ளது . இரவு சாப்பிட்டதும் தூங்கப் போகும் போது விரிந்து இருக்கும் இரைப்பைக்கு கதகதப்பும், இயக்கத் தூண்டலும் அதிகம் தேவை . இடதுபுறத்தை அழுத்தி ஒருக்களித்துப் படுப்பது இதற்கு பெரிதும் உதவுகிறது . மேலும் இடப்புறம் படுக்கும் போது வலது நாசித் துவாரம் வழியாக மூச்சு எளிதில் உட்சென்று வெளியாகும் . இவ்வியக்கம் உணவு செரிக்க உதவும் .
--- தினமலர் , மார்ச் 27 2010 .

Saturday, September 18, 2010

பூலோக நரகம் !

* உலகின் மோசமான சிறைச்சாலைகள் இருப்பது ஆப்பிரிக்காவில் ! அங்கே
உள்ள சிறைச்சாலைகளுக்கு மனித உரிமை அமைப்புகள் வைத்திருக்கும் பெயர் , ' பூலோக நரகம் '.
* ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீஸாருக்குத் தேவையான அனைத்து வகை ஷூக்களையும் தயாரிப்பவர்கள் கைதிகளே. வேலூர் மத்தியச் சிறைவாசிகள்தான் இவற்றைத் தயாரிக்கின்றனர் .
* 1896 - 1906 வரை 10 ஆண்டுகளில் கைதிகளைத் துன்புறுத்திக் கட்டப்பட்ட செல்லுலார் சிறைதான் அந்தமான் சிறைகளில் மிகவும் கொடியது .
* வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட முக்கிய நபர் கலிலியோ கலீலி . ' சூரியன் பூமியைச் சுற்றவில்லை , பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது ' என்கிற அறிவியல் உண்மையைச் சொன்ன கோபர்நிக்கஸின் கருத்தை ஆதரித்தார். மதத்துக்கு எதிராகப் பேசுகிறார் என்று கொந்தளித்த மதவாதிகள், கலிலியோவைக் காவலில் வைத்துவிட்டார்கள் .
--- ஜெயில் விகடன் , இணைப்பு . 31. 03. 2010.

Friday, September 17, 2010

பூக்களில் தேன் !

பூக்களில் தேன் இருப்பதில்லை ! அவற்றில் ' நெக்டார் ' என்ற இனிப்பு திரவம் மட்டுமே சுரக்கும் . அது, சுக்ரோஸும் தண்ணீரும் கலந்த கலவை . இதை உறிஞ்சி தேனீக்கள் தங்கள் வயிற்றில் சேமிக்கும் .
தேனீக்களுக்குள் சுரக்கும் ஒரு என்சைமும் நெக்டரும் இணையும் போதுதான், ப்ரக்ட்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் கொண்ட தேன் திரவம் உருவாகிறது . இதை தேன்கூட்டில் தேனீக்கள் உமிழும் . பிறகு அதில் உள்ள தண்ணீரை நீக்க தங்கள் சிறகுகளால் வேகமாக விசிறும் . தண்ணீர் நீங்குவதால், தேன் கெட்டியாகும் . தேனில் 80 சதவிகிதம் ப்ரக்ட்ரோஸ், குளுக்கோஸ் ; 18 சதவீதம் தண்ணீர் ; 2 சதவீதம் வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன . ப்ரக்ட்ரோஸ், குளுகோஸ் அதிகமாக இருப்பதால்தான் சர்க்கரையை விட தேன் இனிப்பாக இருக்கிறது !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் , 26 , 2010.

Thursday, September 16, 2010

பிரதோஷ நேரம் ?

இரவும் பகலும் சங்திக்கின்ற நேரத்திற்கு ' உஷத்காலம் ' என்பது பெயர் . உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர் . இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா என்பவளாவாள் . அவள் பெயராலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது .
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத்காலம் எனப்படும் . சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதையாதலின் அவள் பெயரால் இது " பிரத்யஷத் காலம் " என்று அழைக்கப்பட்டு இப்போது பேச்சுவழக்கில் " பிரதோஷகாலம் " என அழைக்கப்படுகிறதென்பர் .
பிரதோஷ வேளையை " ரஜ்னிமுகவேளை " எனவும் அழைப்பர் . இதற்கு இரவின் முகம் என்பது பொருளாகும் . நிகண்டுகள் பிரதோஷகாலத்தை இரவின் முகம் என்றே குறிப்பிடுகின்றன .
இந்தப்பொழுது சாயும்நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்குச் " சாயா '" என்பது ஒரு பெயராகும் . இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரஷிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் " சாயரட்சை " எனவும் அழைக்கப்படுகிறது என்பர் .
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள் ; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது . எனவே குற்ரமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று பிரதோஷ வேளைக்குப் பண்டிதர்கள் விளக்கம் கூறுவர் .
--- தினமலர் , இணைப்பு . மார்ச் 25 , 2010 .

Wednesday, September 15, 2010

' விளையாட்டு வினையாகும் '

' விளையாட்டு வினையாகும் . சின்னத் திருட்டும் உயிர் வாங்கும் ' என்று நிரூபிக்கும் திருட்டு இது . மங்கோலியர்களின் அரசனாக மாறிய செங்கிஸ்கான், ஒருமுறை தன் அண்ணனோடு சாப்பிட அமர்ந்தார் . இருவருக்கும் பொதுவாக ஒரு பெரிய மீனை வைத்தார்கள் . பங்கிடும் பொறுப்பு அண்ணனுக்கு வந்தது . தம்பியோடு விளையாடி நெடுநாட்களாகி விட்டதால், பெரிய துண்டைப் பதுக்கி வைத்துவிட்டுச் சிறிய துண்டை செங்கிஸ்கானுக்குக் கொடுத்தார் அண்ணன் . திருடர்களைத் தண்டிக்கும் அப்போதைய வழக்கப்படி, அடுத்த விநாடியே அண்ணனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டார் செங்கிஸ்கான் !
--- இரா. மன்னர்மன்னன், யா. நபீசா . களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .

Tuesday, September 14, 2010

பிரமிடுகள் !

பிரமிடுகள் உலக அதிசயம் மட்டுமல்ல ; உலகின் காஸ்ட்லியான பொருள்கள் திருடப்படும் இடமும்கூட ! எகிப்திய மன்னர்கள் இறந்த பின், அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், கட்டில், கைத்தடி என எல்லாப் பொக்கிஷங்களையும் உள்ளே வைத்துப் பிரமிடு கட்டினார்கள் . திருடர்களுக்கு பிரமிடுகள் என்றால் சொர்க்கம் . மம்மிகளைச் சுற்றி இருக்கும் லினன் துணிகள்கூட விலை போகும் . மம்மி போட்டு இருக்கும் தங்க முகமூடி, நகை, மோதிரம் எல்லாமே அதைவிட அதிகமாக விலைபோகும் . ஒரே திருட்டு... 'ஓஹோ'ன்னு வாழ்க்கை . கும்பல் கும்பலாகப் பிரமிடுக்குள் புகுந்தார்கள் திருடர்கள் . டுட்டன் காமென் கல்லறையை மட்டும்தான் விட்டுவைத்தார்கள் . பிரமிடுக்குள் நுழைவதும், வழி கண்டுபிடிப்பதும் சவாலான விஷயம் . பெரும்பாலான மன்னர்களின் கல்லறை பூமிக்கு அடியில் இருக்கும் . அதற்கு மேல் பொய்யாக ஒரு கல்லறை இருக்கும் . ரொம்பக் கனமான கதவுகளைத் திறந்தால் மேலே தொங்கும் பெரிய கல் விழுந்து நசுக்கிவிடும் . கல்லறைக்கு அருகே குழிகள் மூடி இருக்கும் . கால்வைத்தால் கபாலமோட்சம்தான் . இத்தனையையும் தாண்டி எல்லா பிரமிடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டார்கள் திருடர்கள் . ' இதுவரை பிரமிடுகளில் குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொக்கிஷங்கள் திருடு போயிருக்கும் ' என்று கனக்குச் சொல்கிறது எகிப்து அரசு .
--- கார்த்திகா, களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .

Monday, September 13, 2010

கடல் கொள்ளையர்கள் !

கிரேக்க நாட்டில் லெம்னோஸ் என்ற தீவு , கடற் கொள்ளையர்கள் மட்டுமே வாழக்கூடிய ஒரு தீவாக இருந்திருக்கிறது . ஒரு முறை ரோமானிய மாமன்னர் ஜூலியஸ் சீஸரையே கடத்திச் சென்றனர் சிசிலிய கடற்கொள்ளையர்கள் . அவரை விடுவிக்க 20 ஜாடி தங்கம் கேட்டனர் . சீஸரோ தான் 50 ஜாடி தங்கத்துக்குப் பெறுமானவன் என்று சொல்ல, பணயத் தொகை உயர்த்தப்பட்டது . சீஸர் விடுவிக்கப்பட்டதும் தன் ஒட்டுமொத்தக் கப்பல் படையோடு கொள்ளையர்களைத் தேடி பிடித்து வீழ்த்தி, அத்தனை பேரையும் கொன்றார் . 1990களுக்குப் பின்னர் நவீன காலத்தில் கடல் கொள்ளையின் கொடூரத்தை உணரவைத்தது சோமாலியர்கள்தான் .
---தீபக் . களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .

Sunday, September 12, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

ஃரான்ஸ் மியூஸியத்தில் இருந்த மோனோலிசா ஓவியம் 1911- ம் ஆண்டு ஆகஸ்ட் 21 -ம் தேதி காணாமல்போனது . நாடே பரபரக்க , ஓவியம் இல்லாத வெறும் ஃப்ரேமைப் பார்க்க மக்கள் குவிந்தார்கள் . 60 பேர் அடங்கிய குழு விசாரணையில் இறங்கியது . எந்தத் தகவலும் இல்லை . இரண்டு வருடங்கள் கழித்து, 1913 -ல் திருடிய ஓவியத்தை விற்க முயன்றபோது சிக்கினான் திருடன் .வின்சிரோ பெருஜியா என்ற பெயருள்ள அவன் மியூஸியம் ஒன்றில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவன் . ' நான் இத்தாலியில்வைத்து அழகு பார்க்கவே திருடினேன் ' என்று வாக்குமூலம் கொடுத்தான் . கைப்பற்றபட்ட ஓவியம் மறுபடியும் அதே இடத்தில் வைக்கப்பட்டது .
--- ஸ்ம்ருதி, இர. ப்ரீத்தி .களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .

Friday, September 10, 2010

தெரிந்து கொள்ளுவோம் !

* புகையும் ஒரு சிகரெட்டின் முனையில் 700 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் . இதில் இருந்து புகையை உள் இழுக்கும் போது 60 டிகிரி வெப்பம் வாய் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது . புகைந்துகொண்டு இருக்கும் ஒரு சிகரெட்டில் இருந்து நான்கு ஆயிரம் வகை வேதிப் பொருட்கள் வெளியேறும் ..
* 40 பனிப் பள்ளங்கள், சந்திரனில் இருப்பதை சந்திராயனின் ரேடார் கண்டுபிடித்துள்ளது !
* ராமனுடைய முடியை அடைய ஆசைப்பட்ட மகுடம் புறக்கணிக்கப்பட்டது. அவனுடைய கால்களை அடைந்த பாதுகைக்கோ சிம்மாசனம் கிடைத்தது .

Thursday, September 9, 2010

சாமியார்கள் !

மாட்டிக்கொள்ளும் சாமியார்கள் !
" தொடர்ச்சியாக சாமியார்கள் மாட்டிக்கொள்கிறார்களே ?"
" பிரேமானந்தா கைதானபோது சொல்கேளான் என்ற கவிஞர் எழுதிய கவிதை இது . அது இனி வரும் காலத்துக்கும் பொருந்தும்போலும் !
' இடது கையில்
திருநீறு எடுத்தீர்கள்
வலது கையால்
குங்குமம் எடுத்தீர்கள்
வாயிலிருந்து
சிவலிங்கம் எடுத்தீர்கள்
உங்களை ஜாமீனில்
எடுக்க முடியவில்லையே ? ' "
--- பா. இசக்கிமுத்து, வெள்ளானைக்கோட்டை. நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்தவிகடன். 24. 03. 2010.

Wednesday, September 8, 2010

முன்னேறுவாய் !

செருக்கை விட்டு
சிரிப்புடன் பேசு
பண்பில் முன்னேறுவாய் !
வறுமையை எண்ணாமல்
திறமையைக் காட்டு
வாழ்வில் முன்னேறுவாய் !
சோகத்தை விரட்டி
வேகத்தை கூட்டி
விவேகத்தை நாட்டு
நீ அனைத்திலும்
முன்னேறுவாய் !
-- அ. ராஜேஷ் , ஆரணி. தினத்தந்தி , இணைப்பு . 20. 03. 2010. இதழ் உதவி : வியட்நாம் . R .கணேஷ் , திருநள்ளாறு

Tuesday, September 7, 2010

மாயக்கனக்கு .

எல்லாம் ஒரே விடை !
ஏதாவது மூன்று இலக்க எண்ணைக் குறீத்துக் கொள்ளூங்கள் . ஒரு கண்டிஷன் : அதன் முதல் இலக்கம் , 3வது இலக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் ( உதாரணமாக 421 ).
இந்த எண்ணை ரிவர்ஸில் எழுதுங்கள் ( 124 ).
முதலில் எழுதிய எண்ணில் இருந்து ' ரிவர்ஸ் ' எண்ணைக் கழியுங்கள் ( 421 -- 124 = 297 ).
இந்த விடையையும் , அதன் ரிவர்ஸ் எண்ணையும் கூட்டுங்கள் ( 297 + 792 = 1089 ).
எந்த மூன்று இலக்க எண்ணைப் பயன்படுத்தினாலும் விடை 1089தான் வரும் !
__ தினமலர் . இணைப்பு . மார்ச் , 19, 2010.

Monday, September 6, 2010

ரத்த குரூப் !

விலங்குகளின் ரத்த குரூப் !
மனிதர்களின் ரத்தத்தில் ஏ , பி , ஓ ஆகிய அடிப்படை ரத்த குரூப்கள் உள்ளன . ஏபி, பாசிடிவ் / நெகட்டிவ் என துணை ரத்த குரூப்களும் உள்ளன .
விலங்குகளுக்கும் இதுபோல் அடிப்படை ரத்த குரூப்களும், துணை ரத்த குரூப்களும் உண்டு ! உதாரணமாக, நாய்களுக்கு டிஇஏ -- 1. 1 , 1,2,3,4,5,6,7 என்று ரத்த குரூப்கள் உண்டு . இதுபோல் பூனைகளுக்கு ஏ, பி, ஏபி; ஆடுகளுக்கு ஏ, பி, சி, எம், ஜே ; குதிரைகளுக்கு ஏ, சி, டி, கே, பி, க்யூ, யு என்று ரத்த குரூப்கள் உள்ளன .
விலங்குகளின் ஏ, பி போன்ற ரத்த குரூப்கள் , மனிதனின் ரத்த குரூப்களில் இருந்து வேறு பட்டவை .
--- தினமலர், இணைப்பு. மார்ச் , 19 , 2010.

Sunday, September 5, 2010

தடா !

நெடிக்குத் தடா !
பிளாஸ்கின் உட்புறத்தை எத்தனை முறை சுத்தமாக்கினாலும் நெடி தொடர்ந்து வீசுகிறதா ?
அடுத்தமுறை துலக்கும்போது , பிளாஸ்கை கொதிநீரால் நிரப்பி , அதில் ஒரு டீ ஸ்பூன் பைகார்பொனேட் சோடாவை விட்டுச் சில நிமிஷங்கள் ஊற வைத்துச் சுத்தம் செய்தால் அந்த நெடி இருக்காது .
--- நி. ப. ( 26. 01. 1975 ) ஆ.விகடன் ,17. 03. 2010.

Saturday, September 4, 2010

கடவுளிலிருந்து சாத்தானுக்கு...

Doctor 's Value.
When death lurks the door,
the doctor is considered as a God .
When the Danger has been overcome,
the doctor is looked upon as an Angel .
When the patient begins to Convalesce
the doctor becomes a More man .
When the doctor asks for his fees,
he is considerered as Satan himself .
பெங்களூரில் ஃப்ரேஸ்ர் டவுனில், டாக்டர் ஊத்தப்பா அவர்கள் நடத்தும் காவேரி நர்ஸிங் ஹோமில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்ததை பார்த்து எழுதியவர் : எஸ். கண்ணன் . ( 05. 01. 1975 )
--- ஆ.விகடன் ,17. 03. 2010.

Friday, September 3, 2010

யாரும் இன்று இல்லை !

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், ' காசும், பணமும், நகையும் ஆட்கொல்லி ' என்றார் .
தனக்குத் தினமும் பக்தர்கள் தரும் பழங்களை மட்டுமல்ல ; வெள்ளி, தங்கத்தையும் அன்றையதினமே அடுத்து வருகிற பக்தர்களுக்குக் கொடுத்தவர் மகா பெரியவர் . ' இதெல்லாம் வாசலுடன் போயிடணும் ' என்பது அவரது அருள்வாக்கு .
பக்கத்தில் ஒரு குச்சி... கையில் விசிறி... இரண்டு சிரட்டைகள்... மட்டும் சொத்தாக வைத்திருந்த யோகி ராம்சுரத்குமாரிடம் யாராவது ஏதாவது வேண்டினால், ' ஐ யம் எ பெக்கர் . உனக்கும் சேர்த்து நான் ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன் ' என்று மட்டும் சொல்வார் .
இந்து மதத்தின் தத்துவத்தை உலகம் அறியச்செய்துவிட்டதாக கும்பகோண்த்தில் விவேகானந்தருக்கு பாராட்டு விழா நடந்தது . ' உங்களுடைய விசுவாசம் எப்போதும் கொள்கைகளில்தான் இருக்கவேண்டும் . தனி நபர்களிடம் இருக்கக்கூடாது ' என்று சொல்லி விட்டுப் போனார் .
இவர்களில் யாரும் இன்று இல்லை . இன்று இருப்பவர்களில் எவரும் இவர்கள் இல்லை !
--- ப. திருமாவேலன் , ஆ .விகடன் , 17. 03. 2010.

Thursday, September 2, 2010

" அதை எப்படிக் கவனித்தீர்கள் ?"

1931 -ம் ஆண்டு லண்டனில் இந்தியர்களின் சுதந்திரம்பற்றி விவாதிக்க, வட்ட மேஜை மாநாடு நடந்தது . இந்தியர்களின் சார்பில் மகாத்மா காந்தி உட்பட பல தேசத் தலைவர்கள் ஒன்றாக கலந்துகொண்டார்கள் . மாநாட்டைப் பதிவு செய்ய பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தார்கள் . மாநாட்டின் ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்பட்டது .
மாநாடு முடியும்பொது இந்திய இளம் பத்திரிகையாளர் ஒருவர் காந்தியைச் சந்தித்தார் . தான் சேகரித்த ஒரு தகவலைச் சொல்லி " அது சரிதானா ? " என்று கேட்டார் . ஆச்சர்யத்தோடு, " அதை எப்படிக் கவனித்தீர்கள் ? " என்று சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார் காந்தி . மறுநாள் ' வட்டமேஜை மாநாடு நடந்துகொண்டு இருக்கும்போது மகாத்மாவுக்கு ஒரு பல் விழுந்துவிட்டது ' என்று ஸ்கூப் நியூஸ் எழுதினார் அந்தப் பத்திரிகையாளர் . அப்போது லண்டனில் நிருபராக இருந்த அந்த இளஞர் தான் பின்னாளில் ' தினத்தந்தி 'யைத் துவக்கிய ஆதித்தனார் .
--- இரா . மன்னர் மன்னன் , ஸ்கூப் விகடன் .17. 03. 2010 .

Wednesday, September 1, 2010

' ஹம்பி ! '

கலையும் புனிதமும் கலந்தது ஹம்பி !
பாரதத்தின் பொற்காலத்தைப் பதிவுசெய்த விஜயநகர பேரரசின் தலைநகராகத் திகழ்ந்த இடம் , உலகப் பாரம்பரிய சின்னமான ஹம்பி . இதன் வரலாறு, புனிதமும் வீரமும் கலையும் கலந்த பெருமித்க் களஞ்சியம் .
பெங்களூரில் இருந்து 353 கி.மீ., தொலைவில் , ஹோஸ்பேட் நகரின் அருகில் மலைகள், பள்ளத்தாக்குகளின் மத்தியில் 500க்கும் அதிகமான புராண, சரித்திர நினைவுச்சின்னங்களோடு மிளிர்கிறது ஹம்பி .
பிரம்மனின் மகளான பம்பா , சிவபெருமானின் அருளைப் பெற தவம் செய்த இடம் என்பதால் பம்பா என்ற பெயரைப் பெற்று , பிற்காலத்தில் ஹம்பி என்று மருவியதாக ஒரு ஐதீகம் . இதற்கு ' பம்பா தவம் செய்த பம்பசரோ வரையும் முக்கண்ணனாக சிவபெருமான் காட்சியளித்த விருபாட்சர் கோயிலையும் சாட்சியாக்குகின்றனர் . ஹம்பியின் சுற்றுப்பகுதிதான், ராமாயண கால வாலி , அங்கதன் ஆட்சி புரிந்த கிஷ்கிந்தா என்று ஒரு ஐதீகம் .ரிஷிமுக பர்வதம், ஆஞ்சநேயர் மலை, மாதுங்க முனிவர் மலை என ராமாயண இடங்கள் நிறைந்த ஹம்பியில் அனுமன் சிலைகளும் ஏராளம் . மிகப் பெரிய அனுமன் சிலை, ரங்கர் கோயிலில் உள்ளது . இப்போதும் குரங்குகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன .
இந்த சுற்றுவட்டாரத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களான ஹக்கர் ( ஹரிஹரர் ), புக்கர் என்ற சகோதரர்கள் வேட்டையாடியபோது ஹம்பியில் அவர்களது வேட்டைநாயை ஒரு முயல் துரத்தி விரட்டியதால், இதைத் தலைநகராக்குமாறு அவர்களது குரு வித்யாரண்யர் கூறினார் . ஹம்பி தலைநகரானபின் போர்களில் வாகைசூடி விஜயநகரப் பேரரசை ஸ்தாபித்தனர் என்கிறது சரித்திரம் . கி.பி. 1336 முதல் 1565 வரை மாபெரும் இந்து பேரரசாகத் திகழ்ந்த விஜயநகரப் பேரரசின் புகழ், கிருஷ்ணதேவராயர் காலத்தில் ( 1509 -- 29 ) உச்சம் தொட்டது . பின்னர், முகலாயத் தளபதிகளின் கூட்டணி படையெடுப்பும் ஆறு மாத கொடும் சூறையாடலும் ஹம்பியை சின்னாபின்னப் படுத்தியது .
விருபாட்சர் கோயில், விட்டலர் கோயில், ரங்கர் கோயில், பிரமாண்டமான லக்ஷ்மிநரசிம்மர் சிலை, கல் தேர், தாமரை மண்டபம் என கண்கவர் கலைநுட்பங்கள் நிறைந்த ஹம்பியின் கம்பீர வரலாற்றுக்கு அங்கு நிறைந்துள்ள கல்வெட்டுக்களே மவுன சாட்சியம் !
--- தினமலர் , இணைப்பு .மார்ச் 14 , 2010 .

' எட்டுமேல அஞ்சு '

இன்று 1 / 9 / 10 கோகுலாஷ்டமி .
கோகுலாஷ்டமி கொண்டாடும்போது வாசலில் இருந்து கண்ணனின் பாதம் வரைவது வழக்கம் .
இதில் , சிவ -- விஷ்ணு ஒற்றுமையைக் காணலாம் . அதாவது , எட்டு என்ற எண்ணைப் போல இருக்கும் பாதம் எட்டெழுத்து மந்திரமான ' ஓம் நமோ நாராயணாய ' என்பதைக் குறிக்கிறது .
அந்த பாதத்துக்கு மேலே ஐந்து புள்ளிகளாக வரையப்படும் ஐந்து விரல்கள் பஞ்சாட்சரமான ' ஓம் நமச்சிவாய ' என்பதை உணர்துகிறது . இப்படி அஷ்டாட்சரமும் , பஞ்சாட்சரமும் சேர்ந்ததுதான் கண்ணனின் திருவடி.
--- ஒரு சொற்பொழிவில் கேட்டது .