Tuesday, September 21, 2010

சொர்க்கம் !

காவிரிக் கரையோர சொர்க்கம் !
கர்நாடகாவில் காவிரிக் கரையோரத்தில் உள்ள சோமாநாதபுரம் என்ற சிறு கிராமத்தில் மிகப்பிரமாண்டமான ஆன்மிகக் கலைக்கூடமாகக் காட்சியளீக்கிறது, பிரசித்தி பெற்ற கேசவர் திருக்கோயில் !
பெங்களூரில் இருந்து 140 கி. மீ., மைசூரில் இருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ளது , 16 முனை நட்சத்திர வடிவிலான இந்த பூலோக சொர்க்கம் . இதை கி. பி. 1268 ல் கட்டியவர், ஹொய்சால மன்னரான 3 ம் நரசிம்மனின் தளபதியான சோமநாதர் . இவரது பெயரே கிராமத்தின் பெயராகியுள்ளது . கோயில் உருவான வரலாற்றை, வாயிலில் உள்ள கன்னடக் கல்வெட்டு மிக விரிவாகத் தெரிவிக்கிறது .
கலைநுட்பம் நிறைந்த சுற்றுச்சுவர், 64 அறைகள் கொண்ட திறந்தவெளி திண்ணை மத்தியில் அமைந்துள்ள திருக்கோயிலில் கேசவர், ஜனார்த்தனர், வேணுகோபாலர் ஆகிய தெய்வங்களுக்கு கர்ப்பகிரகங்கள் உள்ளன கால சுழலில் கேசவர் விக்ரகம் மாயமாகிவிட்டது . மற்ற இரு தெய்வங்களுக்கும் அன்றாட பூஜை தொடர்கிறது . சுற்றுச் சுவரில் 194 சிற்பங்கள் உள்ளன . இந்த சிற்பங்களின் கீழ் சிற்பிகள் தங்களது பெயர்களைப் பொறித்திருப்பது ஒரு அதிசயம் !
தவம் செய்யும் விஷ்ணு, நடனமாடும் லக்ஷ்மி, வீணைமீட்டும் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்தி நிற்கும் பிரம்மா, ஐராவத யானையில் பயணிக்கும் தேவேந்திரன், கோயிலின் தெற்கு சுவரில் ராமாயணக் காட்சிகள், வடக்கு சுவரில் மகாபாரத காட்சிகள்... இப்படி நீண்டுகொண்டே போகும் அரிய சிற்பங்களின் கலைஅழகு சொல்ல மொழி போதாது !
--- தினமலர் , மார்ச் 21 2010..

No comments: