ஒரே நேரத்தில் ஏழு உயிர்களை பறித்த ஆளை எந்த சட்டத்தின் கீழ் தண்டிப்பது ? கவனக் குறைவாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியதாக ரயில் டிரைவர் மீது புகார் கொடுத்துள்ளது வனத்துறை . மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த ஏழு யானைகளை மோதி கொன்ற சரக்கு ரயில் டிரைவர் .
அது காட்டு பகுதி . இரவு மணி பத்தரை . இருட்டுதான் . ஆனால், மரங்களோ புதரோ மறைக்காததால், இஞ்சின் லைட் வெளிச்சத்தில் ரயில் பாதை நன்றாகத் தெரியும் . டிரைவர் பார்த்திருந்தால் தண்டவாளத்தின் நடுவில் இரண்டு குட்டி யானைகள் விழுந்து கிடப்பதும், ஐந்தாறு யானைகள் வட்டமாக சுற்றி நின்று தூக்கிவிட முயன்று கொண்டிருப்பதும் தெரிந்திருக்கும் . பிரேக் போட்டிருப்பார் . மூன்று பெண், மூன்று குட்டிகள், ஒரு ஆண் என ஏழு யானைகள் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து மோதிய சரக்கு ரயிலில் அடிபட்டு துண்டு துண்டாக சிதறியிருக்காது .
' ஸாரி..' சொல்லக்கூட ரயில்வேக்கு மனம் வரவில்லை . அந்த இடத்தில் அந்த நேரத்தில் யானைகள் வரும் என முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று வனத்துறை மீது பழி போடுகிறது . விலங்குகள் குறுக்கே வரக்கூடிய பகுதிகள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது . அங்கு ரயிலின் வேகம் 50 கி. மீ. தாண்டக்கூடாது . இருந்தும் 20 ஆண்டுகளில் 150 யானைகள் இப்படி பலியாகியுள்ளன . அதிக பட்சம் அசாம், அடுத்து மே. வங்கம், ஐந்தாவது தமிழகம் . தண்ணீருக்காக அலையும் கோடையில் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன . யானையை நண்பனாக நேசித்து கடவுளாக மதிக்கும் நாட்டுக்கு இது பெரும் களங்கம் .
உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும் குணத்தில் ஒரு குழந்தை போன்றது யானை . டால்பின், குரங்கு போன்று அது புத்தியுள்ள விலங்கு . நம்மை போல ரத்த பாசம் அதிகம் . விபது நடந்த மறுநாள் அதே நேரத்துக்கு 30 யானைகள் கூட்டமாக அங்கு வந்து அரை மணி நேரம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு, ஆக்ரோஷமாக பிளிறிக் கொண்டு அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்து துவம்சம் செய்தன . வனத்துறை அதிகாரிகள் குறுக்கிடவில்லை . கோபம் தணிந்ததும் அமைதியாக காட்டுக்கு திரும்பிவிடும் என்று அவர்களுக்கு தெரியும் .
--- தினகரன் , தலையங்கம் . செப்டம்பர் 26 , 2010 . ஞாயிற்றுக்கிழமை .
No comments:
Post a Comment