ஹேம்லட்டில், ஷேக்ஸ்பியர் சிட்டுக் குருவியைப் பற்றி குறிப்பிடுகிறார் . லேகிய சிட்டுக்குருவி அல்ல ; பைபிளில் வரும் சிட்டுக்குருவி .
' There is special providence in the fall of a sparrow . If it be now it is not to come ; if it be not to come , it will be now ; if it be not now , yet it will come -- the readiness is all . ' என்ன ஒரு கவித்துவம் ! பொலோனியஸின் மகன் லார்ட்டஸுக்கும் தன் வளர்ப்பு மகனான இளவரசன் ஹேம்லட்டுக்கும் வாள் சண்டைக்கு ஏற்பாடு செய்கிறான் க்ளாடியஸ் அரசன் . வாள் சண்டையில் ஹேம்லட் மரணமடைய வேண்டும் என்பது அரசனின் திட்டம் . அதற்காக லார்ட்டனின் வாள் முனையில் கடும் விஷம் தடவப்படுகிறது . அப்படியும் ஹேம்லட் சாகாவிட்டால் என்ன செய்வது என்று போட்டியின் இடையே அவனுக்கு விஷம் கலந்த ஒயினும் கொடுக்க ஏற்பாடு செய்கிறான் அரசன் .
ஏற்கனவே லார்ட்டஸின் தந்தையான பொலோனியஸைக் கொன்றவன் ஹேம்லட் ; மேலும் , லார்ட்டஸின் சகோதரி ஒஃபிலியாவுக்குப் பைத்தியம் பிடித்து அவள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணமாக இருந்தவன் ஹேம்லட் . இப்படி தன் தந்தை, சகோதரி ஆகிய இருவரின் மரணங்களுக்கும் காரணமான ஹேம்லட்டைப் பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறான் லார்ட்டஸ் . இந்தச் சதியை யூகித்துவிட்ட ஹேம்லட்டின் நண்பன் ஒராஷியோ, ' இந்த வாள் சண்டையில் கலந்துகொள்ளாதே ' என்று ஹேம்லட்டைத் தடுக்கிறான் . அப்போது ஹேம்லட் சொல்லும் வாசகமே இது . என்ன அர்த்தம் ? ' இப்போது நடக்கும் என்றால் , அது நடக்காமல் போகலாம் ; நடக்காது என்றால் , நடந்தாலும் நடந்துவிடலாம் ; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும் . எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது . எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது !'
அந்தச் சண்டையில் விஷம் தோய்ந்த வாள் பட்டதால் லார்ட்டஸும் சாகிறான் . சாவதற்கு முன்னால் க்ளாடியஸ் அரசனின் சதிபற்றி ஹேம்லட்டிடம் சொல்லிவிடுவதால், அதே விஷ வாளினால் க்ளாடியஸைக் குத்தி, அவன் ஏற்பாடு செய்திருந்த விஷ ஒயினையும் அவனையே அருந்தச் செய்கிறான் ஹேம்லட் . சோக காவியம் என்பதால் முடிவில் எல்லோரும் இறந்துவிடுகிறார்கள் .
--- மனம் கொத்திப் பறவை ! தொடரில் , சாருநிவேதிதா . ஆனந்தவிகடன் , 11. 8. 10 .
No comments:
Post a Comment