ரகசியம் அம்பலமாகி விட்டதே என்று ஒரு நாடே ஆதங்கத்தில் இருக்கிறது . ராணுவ ரகசியமோ , அதிபரின் குடும்ப ரகசியமோ கிடையாது . நாடகத்தின் கடைசி சீன் !
அகதா கிறிஸ்டி தெரியாதவர்கள் குறைவு . கிரைம் நாவல்களின் தாய் . ஆங்கிலத்தில் 80 நாவல்கள் , 27 நாடகங்கள் , ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதி குவித்து ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர் . அவர் படைப்புகள் 103 மொழிகளில் 400 கோடி பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன . அதைவிட அதிகம் விற்றது பைபிள் மட்டுமே . ' மவுஸ்டிராப் ' -- எலிப்பொறி -- இவருடைய பிரபல நாடகம் . ஒரு விடுதியில் கொலை நடக்கிறது . கொலையாளி யார் என்பது கடைசி காட்சியில் தெரியும் . ' இந்த முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள் ' என்ற வேண்டுகோளுடன் திரை இறங்கும் .
சென் மார்ட்டின்ஸ் தியேட்டரில் நாட்கம் 63 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது . லண்டனுக்கு செல்பவர்கள் தவிர்க்க முடியாத அனுபவம் . இதுவரை 24 ஆயிரம் ஷோ ; ஒரு கோடி பேருக்குமேல் பார்த்திருக்கிறார்கள் . எவரும் முடிவை வெளியே சொல்லவில்லை . அப்படி காப்பாற்றப்பட்ட ரகசியத்தை இன்டர்நெட் கலைக்களஞ்சியம் ' விக்கிபீடியா ' உடைத்துவிட்டது . இதனால் இங்கிலாந்து ,மக்கள் மனம் உடைந்து அரற்றுகிறார்கள் . நாடகத்தின் உரிமையை பிறந்தநாள் பரிசாக பெற்ற அகதாவின் பேரன் கொதிக்கிறார் . கூட்டம் குறையும் என்ற பயத்தால் அல்ல . 2011 மே 14 வரை ஹவுஸ்ஃபுல் , டிக்கெட் கிடையாது .
அகதாவின் அநேக படைப்புகள் சினிமா வடிவம் பெற்றுள்ளன . மவுஸ்டிராப்பை படமெடுக்க உரிமம் பெற்றவருக்கு அதிர்ஷ்டம் பிறக்கவில்லை . ' நாடகம் நிறுத்தப்பட்டு 6 மாதம் ஆனபின் படப்பிடிப்பை தொடங்கலாம் ' என்பது ஒப்பந்த ஷரத்து . கடல் வற்றியதும் மீன் பிடிக்க காத்திருக்கிறார் பட அதிபர் .
ரகசியம் இல்லாமல் சுவாரசியம் ஏது ? எவருக்கும் தெரியாத ஒன்று எனக்கு தெரியும் என்பதாகட்டும் ; நான் செய்த தப்பு எவருக்கும் தெரியக் கூடாது என்பதாகட்டும் ; பயங்கரமான ரகசியம் தெரிந்துவிட்டது , அதை சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பதாக இருக்கட்டும் , அது வாழ்க்கைக்கு ருசி சேர்க்கிற சமாசாரம் . இன்டர்நெட் தாக்கத்தில் ரகசியம் என்ற வார்த்தையே அழிவின் எல்லைக்கு வந்துவிட்டது .
--- தினகரன் தலையங்கம் , செப்டம்பர் 5 , 2010 ஞாயிற்றுக்கிழமை .
No comments:
Post a Comment