ஒவ்வொரு நாடும் , அதன் கடற்கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தன் எல்லையாக்கிக்கொள்ளலாம் . 12 நாட்டிகல் மைல் என்பது உத்தேசமாக 22.2 கி. மீ. தூரம் . இந்த 22 கி. மீ. தூரத்துக்கும் முதலாளி அந்த நாடு தான் . ஆனால் , இந்த வழியாக பிற நாட்டுக் பயணக் கப்பல்கள் போன்றவை செல்லலாம் . ஒருவேளை 22 கி. மீ.க்குள் இன்னொரு நாட்டின் எல்லை வந்தால் என்ன செய்வது ? அதுதான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்னை .
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30 கி. மீ.தான் . இரண்டு நாட்டின் கடல் எல்லைகளும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கின்றன . இத்தகைய சூழலில் இரு நாடுகளும் தங்களுக்குள் பேசி எல்லையை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் .
'எனக்கு 22 கி. மீ. தேவை இல்லை . கொஞ்சம் போதும் ' என நினைத்தால் பிரச்னை இல்லை . சிங்கப்பூர் , ஜோர்டான் போன்ற நாடுகள் எல்லாம் ' எங்களுக்கு 6 கி. மீ. தூரம் போதும் ' என விரும்பி ஏற்றுக்கொண்டு இருக்கின்றன . இரண்டு நாடுகளுமே எனக்கு அதிகம் இடம் வேண்டும் என குடுமிப்பிடி சண்டை போட்டால் நிலைமை சிக்கலாகும் .
இந்த 22 கிலோ மீட்டரையும் தாண்டி இன்னும் ஒரு 22 கி. மீ. தூரத்தை நாடுகள் தங்கள் ' கண்காணிப்பில் ' வைத்திருக்கலாம் .இது பெரும்பாலும் போர்கள் அண்டை நாடுகளிலிருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கல்களுக்காக ஏற்படுத்தப்பட்டது . கடலில் ரோந்து போக வேண்டும் , தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றால் இந்த எல்லையைப் பயன்படுத்தலாம் .
இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி , மூன்றாவதாக ஓர் எல்லையும் உண்டு . அது பொருளாதார எல்லை . கரையில் இருந்து சுமார் 393 கி. மீ. தொலைவில் உள்ள எல்லா கடல் வளங்களும் அந்த நாட்டுக்கே சொந்தம் . வேறு நாடுகள் கப்பல் ஏறி வந்து உரிமை கொண்டாடமுடியாது . மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற சகல பொருளாதார உரிமைகளுக்கும் கடிவாளம் அந்தந்த் நாட்டிடமே . இதற்கு மேலும் எல்லையை நீட்டிக்க விரும்பினால், சர்வதேசக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் .
--- சேவியர் . கடல் விகடன் , இணைப்பு - 9 / 12 / 2009 .
No comments:
Post a Comment