ஆன்லைன் லாட்டரிப் பரிசுகள் குறித்து எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி .
உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் ( இ மெடில் ) அல்லது தொலைபேசி அழைப்பு வருகிறது... ஒரு பிரபல அமெரிக்க இணைய நிறுவனம் ( கூகுள், மைக்ரோசாஃப்ட் என்று உங்களுக்கு பரிச்சயமான பெயர் ஒன்று ) நடத்திய லாட்டரியில் பத்து மில்லியன் டாலர்கள் பரிசு உங்களுக்கே உங்களுக்கு விழுந்திருப்பதாக ! அதாவது இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் !
உங்களுக்கு இன்ப அதிர்ச்சிதான் . ஆர்வமாக அந்தக் கடிதத்துக்கு, இந்தப் பணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு பதில் அனுப்பினாலே, இணையத் திருடர்களின் முதல் வலையில் விழுந்தமாதிரிதான் !
அடுத்து... இந்தப் பணத்தை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் என்றால், 3 லட்சம் ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ப்ராசசிங் ஃபீஸ் செலுத்த வேண்டும் . அதை நாங்கள் சொல்கிற வங்கிக் கணக்கில் செலுத்தினால், அடுத்த நாளே நீங்க கோடீஸ்வரர்தான் என்று கருமமே கண்ணாக உங்களுக்குப் பதில் வரும் .
3 லட்சத்தை அந்த அக்கவுண்டில் செலுத்துகிறீர்கள் . உங்களைப் பாராட்டி இன்னொரு கடிதம் .அத்தோடு மூன்று லட்சம் பத்தாது சார் , டிரான்சேக்க்ஷன் சார்ஜ் இரண்டு லட்சம் தேவை . அதைக் கட்டிவிட்டால் அடுத்த நாளே, மீண்டும் டாக்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ், கன்வர்ஷன் சார்ஜ், கிளியரன்ஸ் ஃபீஸ் என உங்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் வரை கறந்துவிட்டு... ஒரு சுபயோக சுபதினத்தில் கம்பிநீட்டி விடுவார்கள் . பிறகென்ன தலையில் துண்டுதான் .
இதைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தன்னுடைய இணைய தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது . அதன்படி வெளிநாட்டு லாட்டரிகளில் இந்தியர்கள் பங்கேற்றுப் பணத்தை இந்தியாவிற்கு மாற்றுவது 1999இல் வெளிநாட்டுப் பணப்பட்டுவாடா சட்டத்தின் ( FOREIGN EXCHANGE MANAGEMENT LAW ) படி தவறானது . அதையும் மீறி இதுமாதிரியான லாட்டரிகளில் ( எந்த விதமாக இருந்தாலும் ), ஒருவேளை உங்களூக்கு நிஜமாகவே பணம் விழுந்திருந்தாலும் அதை உங்களால் எப்போதுமே பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
இது தவிர, இந்தத் திருடர்கள் போலியாக ஆர். பி ஐ. யே கொடுத்ததாகப் போலி லெட்டர் பேடுகளில் பத்திரங்கள் தயாரிப்பதாகவும், உயரதிகாரிகள் போல போலிக் கையெழுத்தோடு பத்திரங்களைக் கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறித்தியுள்ளது . அதேபோல இது மாதிரியான அழைப்புகள் வந்தால் அதை நிராகரிக்கவும் வலியுறுத்தியுள்ளது . வங்கிகளையும் இதுமாதிரியான தொடர்புகள் குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
---புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி
No comments:
Post a Comment