Thursday, July 17, 2014

எது உதவும்?

ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன், ' சுவாமி!  என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது.  விளை நிலங்களும் ஏராளம் உள்ளது.  உடலும்
ஆரோக்கியமாக இருக்கிறது.  எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.  எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை!  எனப் பெருமையடித்துக் கொண்டான்.
     புன்சிரிப்போடு கேட்ட ஞானி,  " வா! சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம்!"  என்றார்.  ' கடுமையான வெயிலில் போக வேண்டுமா?'  என தயங்கினாலும்,  ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான்.  சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன்,  ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சற்றும் முற்றும் பார்த்தான்.  எந்த நிழலும் தென்படவில்லை.  ஞானி கேட்டார், " என்ன தேடுகிறாய்?"
     " நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன்." " ஏன் உன் நிழல் உள்ளதே,  அதில் நீ ஒதுங்கிக்கலாமே?"  " சுவாமி! என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?"
     " என்னப்பா இது... நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை.  உன் பொருட்களே உன்னைக் காப்பாற்றும் என சற்று முன்புதான் சொன்னாய்.  ஆனால்,  இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே?"  என்றார்.  உண்மையை உணர்ந்தான் செல்வந்தன்.
-- ஜி.கே.சுந்தரமூர்த்தி, கோபிசெட்டிப்பாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஆகஸ்ட் 16 - 31, 2013.  

No comments: