Tuesday, July 22, 2014

விஞ்ஞானிகள் புதிய சாதனை

' நான் நினைப்பதை நீ செய்யப் போகிறாய் ' : விஞ்ஞானிகள் புதிய சாதனை
     வாஷிங்டன் :  இரண்டு நபர்களின் மூளைகளை மின்காந்த அலைகள் மூலம் இணைத்து ஒருவர் நினைப்பதை அடுத்தவர் செய்ய வைத்து : விஞ்ஞானிகள் புதிய சாதனைகள் படைத்துள்ளனர்.
இது தொடர்பான ஆராய்ச்சியில் சில சானைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் ஏற்கனவே படைத்துள்ளனர்.  இரண்டு எலிகளின் மூளைகளை மின்காந்த
அலைகளால் இணைக்க முடியும் என டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.  இதேபோல்,  ஒரு மனிதனின் மூளையை எலியின் மூளையுடன் இணைத்து, மனிதன் செய்ய நினைப்பதை எலி செய்து முடிக்கும் என சோதனை மூலம் நிரூபித்தனர். இந்நிலையில் இரண்டு மனிதர்களின் மூளைகள் இடையே மின்காந்த அலைகள் கடத்தும் சோதனையை ராஜேஷ் ராவ் தலைமையிலான  விஞ்ஞானிகள் நடத்தினர்.  இதில், ஒரு கம்ப்யூட்டர் முன்னால் ராஜேஷ் அமர்ந்து, வீடியோ கேம் விளையாடினார்.  அவருடைய தலையில் அணிந்திருந்த தொப்பியில் பல எலக்ட்ரோடுகள் அமைக்கப்பட்டு, இஇஜி கருவியுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் அவருடைய மூளையில் உருவாகும் மின் காந்த அலைகள் சேகரிக்கப்பட்டன.  இதேபோல் மற்றொரு அறையில் கம்ப்யூட்டர் முன்னால் சக விஞ்ஞானி ஆண்ட் ரியோ ஸ்டாக்கோ அமர்ந்திருந்தார்.  அவர் அணிந்திருந்த தொப்பியில் மின் காந்த அலைகளை பெறும் சுருள் அமைக்கப்பட்டிருந்தது.
      ராஜேஷ், ஸ்டாக்கோ அமர்ந்திருந்த 2 அறைகளையும் ஸ்கைப் மூலம் இணைத்து பெரிய திரைகளில் அவர்களுடைய செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.
      கம்ப்யூட்டர் கேம் விளையாடியபோது,  அதில் ஒரு இலக்கை ராஜேஷ் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.  அப்போது சுடுவதற்கான பட்டனை அழுத்துவதற்காக மவுஸ் மீது கை வைக்க வேண்டும் என ராஜேஷ் நினைத்தார்.  ஆனால், கையை அவர் நகர்த்தவில்லை.  அதே நேரத்தில், அவருடைய நினைவு அலைகள் கடத்தப்பட்டு ஸ்டாக்கோ மூளைக்கு வந்து சேர்ந்தன.  அவர் திடீரென கையை தூக்கி மவுஸ் நோக்கி கொண்டு சென்றார்.  இதன்மூலம் ராஜேஷ் நினைத்ததை ஸ்டாக்கோ செய்தார்.
    ஒருவழி கடத்தல்.
    இந்த சோதனை வெற்றி குறித்து விஞ்ஞானி ராஜேஷ் ராவ் கூறுகையில், ' என் மூளை நினைத்ததை ஸ்டாக்கோ மூளை செய்து முடித்தது.  இது ஒருவழி தகவல் கடத்தல் ஆகும்.  இதேபோல் இரண்டு மூளைகள் இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள அடுத்த கட்ட ஆராய்ச்சி நடத்தப்படும்.  இதில் மூளையில் தோற்றுவிக்கும் சில கட்டளைகள் மட்டுமே கடத்தப்பட்டு,  மற்றொரு மூளையால் செயலாக்கப்படுகிறது.  ஆனால்,  ஒருவருடைய விருப்பம் இல்லாமல்,  அவருடைய செயல்பாடுகளை மற்றொருவரால் கட்டுப்படுத்த முடியாது என்றார்.
-- தினமலர் . ஆகஸ்ட் 30, 2013. 

No comments: