எல்லா வயதினருக்கும் பொருந்தும் 'பெரிஸ்'
சிகிச்சையின்போது பிராணவாயு செலுத்தும் புதிய கருவி.
அறுவைச் சிகிச்சையின்போது எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும்வகையில் சீராகவும், எளிதில் கையாளக்கூடியதுமான பிராணவாயு செலுத்தும் புதிய கருவி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம்.பெரியசாமியால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
" அறுவை சிகிச்சை அரங்குக்குள் நோயாளியின் அனைத்து உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்கிறதா,எந்த உறுப்பிலாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அளவிடுவோம். இதை அடிப்படையாகக் கொண்டுதான், நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய மயக்க மருந்தின் அளவு, செயற்கை சுவாசத்தின் அளவு போன்றவை முடிவு செய்யப்படும்.
பிராணவாயுவைக் கொடுக்க நோயாளியின் வயதுக்கேற்ப கருவியை உபயோகிக்க வேண்டி இருந்தது. குழந்தைக்கு, சிறியவர்களுக்கு, பெரியவர்களுக்கு தகுந்தாற்போல் கருவியில் பிராணவாயு வெளிப்படுத்தும் திறனைக் கூட்டிக் குறைத்துபயன்படுத்தவேண்டியிருந்தது.
இதனால் அறுவைச் சிகிச்சை நேரத்தில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுவதோடு, நோயாளியின் ரத்த அழுத்தம் போன்றவைகளை அளப்பதிலும் சிரமம் இருந்தது. இது குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை, கொச்சியில் 1999-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்திய அளவிலான கருத்தரங்கில் சமர்ப்பித்தேன். அதன்பிறகு, மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகி கருவியும் தயாரிக்கப்பட்டது. பெரியசாமி என்னும் எனது பெயரின் தொடக்கமாக " பெரிஸ்" என்ற பெயரில், 2010 -ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் கருவிக்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.
-- கே.சுரேஷ். பூச்செண்டு.
-- ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர், 22, 2013.
No comments:
Post a Comment