Sunday, October 18, 2015

' பிறை தெரிந்துவிட்டது...'


 இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு.  கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்.
     கி.பி. 6 -7 ம் நூற்றாண்டின் மானசாரம் கட்டிடக் கலை மற்றும் சூரியனின் நகர்வு அடிப்படையிலான நாட்காட்டியைக் கொண்டு பழந்தமிழர் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு இன்று ( ஜனவரி 5ம் தேதி ) பிறப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
     இது குறித்து தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன் கூறியதாவது :
     சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் சூரியனை வழிபட்டு அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர்.  அதன் அடிப்படையில்  இன்று ( 5.1.2014 ) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.  சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள்.  சூரியன் வடக்கில் ஆறு மாத காலமும், தெற்கில் ஆறு மாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது.  தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றனர்.
     அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை ( ஜனவரி 1-ம் தேதி ) முடிந்த மூன்றாம் நாள் ( ஜனவரி 4-ம் தேதி ) மாலை பிறை தெரியும்.  அதற்கு மறுநாள்தான் ( ஜனவரி 5-ம் தேதி ) தை முதல் நாள்.  ராஜராஜசோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினான்.
     12-ம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுறும்.  அதன் பெயர் 'ஆட்டைத் திருவிழா.'  இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.
     அதன் அடிப்படையில் இன்று மாலை பிறை தெரிந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
     இவ்வாறு தென்னன் மெய்ம்மன் கூறியுள்ளார்.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
--   ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014.                                    

No comments: