Tuesday, October 4, 2016

பாரதியின் நினைவு நாள்!

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை வலியுறுத்தல்
மகாகவியாக இன்றும் போற்றப்படும் பாரதியாரின் நினைவு நாளில் குழப்பம் உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோவில் தெருவில் வாழ்ந்தபோதுதான் பாரதியாருக்கு மரணம் ஏற்பட்டது. இதுகுறித்து செப்-21-ல் சென்னை மாநகராட்சிப் படிவேட்டில் பாரதி மறைந்த நாள் செப்.12, 1921- என்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் பாரதியின் பாடல்களை ஆய்வுப் பதிப்பாக ம.ரா.போ. குருசாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் 1921 நாள் செப்டம்பர் 12, 1.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
1996-ல் பாரதி வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான சீனி. விசுவநாதன் வெளியிட்ட 'மகாகவி பாரதி வரலாறு' என்ற நூலில், தென்னாட்டுக்கவி சிரேஷ்டர் எனப் போற்றப்பட்ட வரகவி பாரதி 1921 செப்.12-ம் தேதியில் இந்த உலக வாழ்வைத் துறந்து விண்ணவர்க்கு விருந்தாகிவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட மகாகவி பாரதியார் கட்டுரைகள் என்னும் பெயரில் வெளியிடப்பட்ட நூலில் 1921 செப் 12-ம் நாள் யாமம் 1.30 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசும், புதுவை அரசும் செப்-11 ம் தேதியை பாரதியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கின்றன. இதற்கு காரணம் பாரதி மறைந்தது செப்-11ம் தேதி பின்னிரவு 1.30 ( அதாவது செப்-12ம் தேதி அதிகாலை 1.30 ) என்பதுதான். எனவே, தமிழக மற்றும் புதுவை அரசுகள் இந்த ஆண்டிலிருந்து பாரதியாரின் நினைவு நாளை செப்- 12-ல் கடைப்பிடிக்க வேண்டும்.
-- ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 4, 2014.

No comments: