Tuesday, August 4, 2009

தென்னக துவாரகை .

குருவாயூர் என்று சொன்னதும் அங்கு கோவில் கொண்டுள்ள குருவாயூரப்பன்தான் நம் நினைவுக்கு சட்டென்று வருவார் . இங்குள்ள குருவாயூரப்பன் சிலை குரு பகவான் , வாயு பகவான் ஆகியோரது முயற்சியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் , இந்த தலத்துக்கு குருவாயூர் என பெயர் ஏற்பட்டு , இங்குள்ள நாராயணனும் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படுகிறார் .
தென்னக துவாரகை என்ற பெயரும் குருவாயூருக்கு உண்டு . சதுர வடிவமான இந்த கோவிலின் கிழக்கிலும் , மேற்கிலும் இரண்டு கோபுரங்கள் உள்ளன . கிழக்கு கோபுரம் வழியே நுழைந்தால் ,' சுற்றம் பலம்' என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தை அடையலாம் . அங்கே தங்கத்தால் முலாம் பூசப்பட்ட 100 அடி உயர கொடி மரத்தைக் காண முடிகிறது . இங்கேதான் குருவாயூரின் சிறப்பு இசையான செண்டை மேளங்கள் முழங்கும் . அலங்கரிக்கப்பட்ட யானைகளும் குருவாயூரப்பனை வழிபட இந்த இடத்தில்தான் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் .
குருவாயூரப்பன் தரிசனம் : கோவிலுக்குள் நின்ற கோலத்தில் நாராயணன் , அதாவது குருவாயூரப்பன் காட்சித்தருகிறார் . இடையில் பட்டாடையுடன் , மார்பில் ஆபரணங்கள் சூடி , தலையில் ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை தாங்கியுள்ளார் . நான்கு திருக்கரங்களில் ' வலது கரங்கள் ஒன்றில் சக்கரமும் , மற்றதில் மலர்ந்த தாமரை மலரும் காணப்படுகின்றன. இடது கரங்களில் ஒன்று சங்கு தரித்திருக்கிறது . மற்றது கதாயுதம் வைத்துள்ளது .
கருவறையின் உட்புறச் சுவர்களில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன . அழகிய வேலைபாடுகள் கொண்ட சிற்பங்களும் நம் கண்களை குளிர்விக்கின்றன .
விடியற்காலை 3 மணிக்கே கோவில் நடையை திறந்துவிடுகிறார்கள் . அப்போது , முந்தையநாள் செய்த பூ அலங்காரத்தோடு குருவாயூரப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார் . இந்த முதல் தரிசனத்திற்கு
" நிர்மால்ய தரிசனம் " என்று பெயர் .
அதன்பிறகு , குருவாயூரப்பனுக்கு தைலாபிஷேகம் , சங்காபிஷேகம் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு , பாலகோபாலனாக அலங்கரிக்கப்படுகிறார் . உச்சிக்கால பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது .
மாலை 6 மணிக்கு விரிவான தீபாராதனை நடைபெறும் . அப்போது , தீபங்களின் வெளிச்சத்தில் காட்சிதரும் குருவாயூரப்பனின் அழகை ரசிக்க இந்த இரு கண்கள் போதாது என்று எண்ணத்தோன்றுகிறது .
அமைவிடம் : கேரளாவில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு செல்பவர்கள் திருச்சூர் வரை ரெயிலில் சென்று , அங்கிருந்து குருவாயூருக்கு பஸ்ஸில் செல்லலாம் , முக்கிய ஊர்களில் இருந்து நேரடியாகவும் பஸ் வசதியும் உள்ளது .
பாலக்காட்டில் இருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும் , திருச்சூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் குருவாயூர் அமைந்துள்ளது .
துலாபாரம் : குருவாயூர் கோவிலில் துலாபாரம் மிகவும் பிரபலம் . இதற்காக பெரிய தராசு ஒன்று இங்குள்ளது . ஒரு தட்டில் வேண்டுதல் நிறைவேற்றுபவர் அமர்வார் . மற்றொரு தட்டில் அவர் வேண்டிக்கொண்ட காணிக்கை பொருளை எடைக்கு எடை வைப்பார்கள் .பின் , அந்த பொருள் குருவாயூரப்பனுக்கு சமர்ப்பிக்கப்படும் . குழந்தைக்கு முதன் முறையாக சாதம் ஊட்டும் ' அன்னப்பிராசனம் ' என்ற் வைபவமும் இங்கு நடைபெறுகிறது .
--- தினத்தந்தி . 03 - 03 - 2009 .

No comments: