முருகன் வாகனமான மயில் , மிக வேகமாக ஓடுவதால் அதை மயில் என்று சொல்லாமல் குதிரை என்றே சொல்லுவது அருணகிரிநாதருக்கு வழக்கம் . ' ஆடும் பரி ' என்றும் , ' உக்ர துரகம் ' என்றும் பலவிடங்களில் மயிலைக் குதிரையாகவே வர்ணிப்பார் அருணகிரிநாதர் .மயிலைக் குதிரை என்று சொல்லி விட்டதால் , அதை ஒட்டி வருகிற முருகனையும் ' ராவுத்தன் ' என்று அழைக்கிறார் அருணகிரியார் .
யானையை ஓட்டுபவன் மாவுத்தன் ; குதிரையை ஓட்டுபவன் ராவுத்தன் .
இந்த மயிலைப் பற்றிய ஒரு சுவையான சர்ச்சையைத் தொல்காப்பியத்தில் காணலாம் .
தொல்காப்பியர் மரபியல் என்று ஒரு பகுதி எழுதியுள்ளார் . இன்னின்ன பொருளை இன்னின்ன பெயரால் அழைக்கவேண்டும் என்பதே மரபியல் . யானைக் குட்டியை யானைக் கன்று என்றும் , கோழிக்குஞ்சைக் கோழிப் பார்ப்பு என்றும் அழைக்க வேண்டும் என்கிறார் . நாம் பொதுவாகக் கோழி இனத்தில் ஆண் கோழியைச் ' சேவல் ' என்று அழைக்கிறோம் . ஆனால் , கோழிக்கு மட்டுமின்றி , இறைக்கையுடைய எந்தப் பறவையினத்திலும் ஆண் பறவைக்குச் ' சேவல் ' என்பது பொதுப் பெயர் . காக்கைச் சேவல் , குயில் சேவல் , குருவிச் சேவல் என இவ்வாறே சொல்ல வேண்டும் என்பது தொல்காப்பியர் மரபியல் கருத்து .
அப்படியானால் ஆண் மயிலையும் ' மயில் சேவல் ' என்றுதானே சொல்ல வேண்டும் ? ஆனால் தொல்காப்பியர் , " இறைக்கையுடைய பற்வையினத்தில் எல்லா ஆண்களும் சேவல் என்றே அழைக்கப்பட வேண்டும் , மயிலைத் தவிர " என்று எழுதியுள்ளார் .
" சேவல் பெயர்க்கொண்ட சிறகொடு சிவணும்
மாயிருந்தாவி மயில் அலங்கடையே "
மயிலில் ஆண் மயிலை மட்டும் ஏன் தொல்காப்பியர் நீக்கிவிட்டார் ? இங்கேதான் சுவை .
மயிலில் ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு . பெண் மயிலுக்கு இல்லை . தோகையுடைய ஆண்மயில் தான் பார்வைக்கு அழகாக இருக்கும் . அழகு என்பது பெண்மைக்கே உரியது . அதனால் , ஆண்மயில் பிறப்பால் ஆண் ஆனாலும் , அழகாய் இருப்பதால் அதைப் பெண் இனத்திலேயே சேர்த்து ஆண்மயிலைச் ' சேவல் ' என்று கூறக் கூடாது என்று தொல்காப்பியர் கூறிவிட்டார் .
--- புலவர் கீரன் .
No comments:
Post a Comment