இயற்கையிலிருந்து நாம் பயிலவேண்டிய இந்த முக்கியமான பாடங்களைத் தொகுத்து , ' தி கேஸ் ஆஃப் போன்ஸாய் மானேஜர் ' ( ' The Case Of Bonsai Manager ' , Penguin Portfolio வெளியீடு )) என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது . இந்த புத்தகத்தின் ஆசிரியர் யுனிலிவர் , டாடா உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியிருக்கும் ஆர் . கோபாலகிருஷ்ணன் . அவரது சிந்தனைகளிலிருந்து சில துளிகள் இங்கே .
போன்சாய் மரங்கள் :
ஒரு விதையை மண்ணில் ஊன்றி வைத்துத் தண்ணீர் ஊற்றிப் பராமரித்தால் அது பெரிய விருட்சமாக வளரக்கூடும் . ஆனால் , அதைக் கவனமாகக் கத்தரித்து ஒடுக்கினால் , அது ஒரு சின்னத் தொட்டிக்குள் அடங்கிப்போகிற குட்டியூண்டு போன்சாய் மரமாகிவிடுகிறது .
அதுபோல , நாம் ஒவ்வொருவரும் மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கப் பிறந்தவர்கள் , அதை உணராமல் வெளி விஷயங்கள் நம்மைப் பாதிக்க -- கட்டுப்படுத்த அனுமதித்தால் , கிணற்றுத்தவளைபோல ஒரு சின்ன வட்டத்துக்குள் நம்முடைய வாழ்க்கை எல்லை முடிந்துபோய்விடும் .
நத்தையும் நண்டும் :
நத்தைகளின் ஜென்ம விரோதி , நண்டுகள் தான் . எங்கே நத்தையைப் பார்த்தாலும் நண்டுகள் உடனடியாகப் பிடித்துப் பிய்த்து விழுங்கிவிடும் .ஆனால் , அதே நண்டு வில்லன்களால் , நத்தைகளுக்கு ஒரு மிகப் பெரிய நல்லதும் நடக்கிறது தெரியுமா ?
நத்தைகள் சாதாரணமாக நான்கு மாதங்கள்தான் உயிர் வாழும் . ஆனால் , அவற்றுக்கு மத்தியில் ஒரு நண்டை உலவவிட்டால் , அந்த நண்டிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்கிற துடிப்பில் நத்தைகள் சுறுசுறுப்பாகி விடுகின்றன . அவற்றின் சராசரி வாழ்நாள் பன்னிரண்டு மாதங்களாக அதிகரிக்கிறது .
நாமும் , நம்முடைய எதிரிகள் , போட்டியாளர்களை வெறுத்து ஒதுக்கவேண்டியதில்லை . நம்முடன் சரிக்குச் சரி முன்னேறுவதற்கு போட்டி போடுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தால் , நம்முடைய செயல்திறன் பலமடங்கு அதிகரிப்பது நிச்சயம் .
உருப்படாத மண் :
உலகிலேயே விவசாயத்துக்குக் கொஞ்சம்கூடப் பொருந்தாத மண்ணைக் கொண்ட பிரதேசம் என்று பார்த்தால் , ஆஸ்திரேலியாதான் .
ஆனால் , அதே ஆஸ்திரேலியாவில்தான் , மிகப் பிரமாதமான பூச்செடிகள் , மரங்களெல்லாம் வளர்ந்திருக்கின்றன . பசுமை கொஞ்சுகிறது . இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது ?
ரொம்பச் சுலபம் . இந்த மண்ணில் போதுமான ஊட்டச் சத்துக்கள் , வளங்கள் இல்லை என்று தெரிந்ததும் , அங்கே விளையும் செடி , கொடிகள் , ஏன் மிருகங்களின் வளரும் தன்மைகூட மாறிவிட்டது . இருக்கும் சொற்ப சத்துக்களைப் பயன்படுத்திக்கொண்டு வளர்வது ஒன்றுக்கொன்று உதவியாக ஒத்துழைத்துக்கொள்வது போன்றதின் மூலம் அந்த ' உருப்படாத மண்ணைக்கூட , மிகப் பிரமாதமான பூங்காக்கள் , கானகங்களாக மாற்றியிருக்கிறது இயற்கை .
சின்ன முதலை , பெரிய முதலை :
ஒரு முதலை இரண்டு முட்டை போடுகிறது . அதிலிருந்து வரும் குட்டிகளில் ஒன்றை ஒரு சிறிய அறைக்குள் அடைத்துவைத்து வளர்க்கிறோம் . இன்னொன்று பரந்து விரிந்த நதிக்கரையில் வளர்கிறது .
சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் , அந்த முதல் முதலை சிறிய அளவில் , அதாவது அது வளர்ந்த அறையின் நீளத்துக்குத்தான் இருக்கும் . ஆனால் , அதோடு கூடப் பிறந்த இரண்டாவது முதலை அதைப்போல இரண்டு , மூன்று மடங்குகூட மிகப் பெரியதாக வளர்ந்திருக்கும் .
நாமும் அந்த முதலைகளைப்போல்தான் . நாம் எந்தமாதிரியான சூழ்நிலையில் வளர்கிறோம் . நாம் சந்திக்கிற அனுபவங்கள் எப்படிப் பட்டவை . இதெல்லாம்தான் நமது முன்னேற்றத்தைத் தீர்மானிக்கின்றன . ஆகவே , புதிய வாய்ப்புகள் , சவால்கள் வரும்போது தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள் . தயங்கி ஒதுங்கிப்போய் ' சுருங்கிய முதலை 'யாகி விடாதீர்கள் .
பூச்சிக்கு ஆயிரம் கண்கள் :
நம்முடைய வீட்டில் சர்வ சாதாரணமாகத் தென்படும் ஈ , கொசு உள்ளிட்ட பூச்சிகளுக்கு இரண்டு , மூன்று இல்லை , ஏகப்பட்ட கண்கள் உண்டு .
மேலோட்டமாகப் பார்த்தால் இது தெரியாது . உருப்பெருக்கி மூலம் கவனித்தால் ஒரு சின்னப் பூச்சித் தலைக்குள் பல ஆயிரம் கண்கள் இருப்பது தெரியும் .
இதனால் , இந்தப் பூச்சிகள் ஒரு பொருளைப் பார்க்கும்போது , அதைச் சுற்றியிருக்கிற மற்ற சமாச்சாரங்களையும் கவனித்து உள்வாங்கிக் கொள்கின்றன . அவற்றின் அடிப்படையில் தங்களுடைய அடுத்த கட்டத் திட்டங்களைத் தீர்மானிக்கின்றன .
பல சமயங்களில் நம்முடைய சிந்தனையிலும் இந்தப் பூச்சிப்பார்வை அவசியப்படுகிறது . சேணம் பூட்டியதுபோல் ஒரு விஷயத்தை மட்டும் கவனித்துக்கொண்டிருக்காமல் , அங்கே உள்ள சூழல் , மற்ற பின்னணித் தகவல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு முடிவெடுத்தால் அது இன்னும் சிறப்பானதாக அமையும் .
கழுகுக்கும் அன்பு தேவை :
அரேபியா என்று சொன்னதும் , எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஒட்டகம் , அப்புறம் கழுகு .
நம் ஊரில் நாய் , பூனை , கிளியைச் செல்ல பிராணியாக வளர்ப்பதுபோல் , அரேபிய ஷேக்குகள் கழுகு வளர்க்கிறார்கள் . அதற்குப் பல வாரங்கள் பயிற்சி கொடுத்துத் தயார்படுத்துகிறார்கள் . கழுகுக்கும் , அதை வளர்க்கிறவர் , பயிற்சி தருகிறவருக்கும் இடையே நிஜமான அன்பு மலரவேண்டும் . இவர் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்று தெரிந்துவிட்டால் , அதன்பிறகு அந்தக் கழுகு தனது முரட்டுத்தனத்தையோ , பலத்தையோ காண்பிக்காது . அவர் என்ன கோட்டாலும் செய்யத்தயாராகிவிடும் .
அடுத்தவர்களிடம் பழகுகிறபோது , நாமும் இந்தக் கழுகு உதாரணத்தை நினைத்துக் கொள்ளவேண்டும் . மனதில் உண்மையான அன்புடன் பேசி உறவாடினால் , எப்பேர்பட்ட முசுடுகளையும்கூட நம்முடைய நண்பர்களாக்கிக்கொண்டுவிடலாம் .
--- குமுதம் , 06 - 05 - 2009 .
No comments:
Post a Comment