ஒளிக்கு நிழல் எப்படியோ , ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ , அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்வார்கள் விஷயம் அறிந்தவர்கள் . எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ , அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள் . எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம் . " யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது " என்பர் தர்க்க சாஸ்திரிகள் . ஆம் ! நெருப்பு இல்லாமல் புகை வராது . ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது !
புகை மிகவும் நுட்பமானது ; எளிதில் எங்கும் நுழையக் கூடியது . ஆனால் , புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வர்ணிக்கிறார் . ஆனால் , அப்படிப் புகையும் நுழையாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டுப் படலத்தில் நாம் படித்திருக்கிறோம் .இராவணனுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து , அவள் மனத்தை நோகச் செய்து , அவளைப் ' புகையுண்ட ஓவியம் ' போலச் செய்ததால் அல்லவா ?
அறிவின்மைக்கு எடுத்துக்காட்டு ' புகை ' என்பார்கள் சிலர் . அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை . சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலையில் போட்டதும் , அது மங்கி , புகை கிளம்புகிறதல்லவா ? அதை வைத்துக்கொண்டு , அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை ' மடசாம்பிராணி ' என்றும் அழைக்கிறார்கள் !
--- மகரம் , ஆனந்தவிகடன் . 06 - 05 - 1951 .
No comments:
Post a Comment