நாராயணனின் திருவுருவமே தத்துவமயமானது. பெருமாளுடைய திருமார்பை கவுஸ்துப மணி அலங்கரிக்கிறது. இவர் ஜெகத்தின் ஆத்ம சொரூபமாக இருப்பவர் என்பதை இது காட்டுகிறது. மார்பில் திருமறு இருக்கிறது. இதை 'ஸ்ரீவஸ்தம்' என்பார்கள். பிரதானமாக இருக்கக் கூடிய மூல பிரக்ருதியை காட்டும் அடையாளம் இது.
பெருமாளின் கையில் இருக்கும் சங்கு, ஐம்பூத தத்துவங்களுக்கு காரணமாக இருக்கக் கூடிய தாமச அகங்கார தத்துவத்தை உணர்த்துகிறது.
அவர் கையில் இருக்கும் சாரங்கம் என்னும் வில் இந்திரியங்களுக்கு காரணமாக இருக்கும் ராஜ அகங்கார தத்துவத்தைக் காட்டுகிறது. நாராயணனின் கையில் உள்ள சக்கரம், வாயுவை விட வேகமாகச் செல்லும் மனஸ் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது.
அவர் முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் என்னும் பஞ்ச ரத்தினங்களான வைஜயந்தி மாலையை அணிந்திருக்கிறார்.
இது பஞ்சபூத தத்துவத்தையும், பஞ்ச தன்மாத்திரை தத்துவத்தையும் காட்டக் கூடியது. ஞானேந்திரியங்களையும், தந்தேமந்திரியங்களையும் அவர் கைகளில் உள்ள பாணங்கள் காட்டுகின்றன.
உறையில் இடப்பட்டு அவர் இடுப்பை அலங்கரிக்கும் கத்தியானது அவித்யா தத்துவத்தால் மூடப்பட்டு உள்ள வித்யாமயமான ஞானத்தைக் காட்டுகிறது. இப்படி அவர் எல்லாமாக இருக்கிறார். தத்துவமயமானவர் என்கிறது விஷ்ணு புராணம்.
-- தினமலர் .பக்திமலர்.13-11-2014.
No comments:
Post a Comment