Saturday, November 26, 2016

'டெங்கு டேஞ்சர்'

கொலைகார கொசுக்கள்.
டெங்கு... பத்து ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் தில்லியை புரட்டிப் போட்ட இந்த காய்ச்சலுக்கு வைரஸ் கிருமிகள்தான் அடிப்படை. அதன் பின்னர் நாடு முழுவதும் அவை ஏற்படுத்தி வரும் பாதிப்பின் தாக்கம் 'பகீர்' ரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி பதம் பார்க்கும் டெங்குவின் தாய் வீடு கொசுக்கள்...
இந்தக் கொலைகார கொசுக்கள் நான்கு வகை. அவற்றில் 'ஏடிஸ் இஜிப்டை' என்கிற கொசுதான் டெங்கு பரவக் காரணம். புலியின் உடலில் தெரியும் வெள்ளை நிறப் புள்ளிகள் மாதிரி, 'ஏடிஸ்' வகை கொசுக்களின் உடல் மீதும் புள்ளிகள் இருக்கும். அதனால் இதற்கு 'டைகர் கொசு' (!) என்கிற செல்லப் பெயரும் உண்டு.
பெரும்பாலும் மாலை நேரத்தில் வீடுகளுக்குப் படையெடுக்கும் குணம் கொசுக்களுக்கு உண்டு. என்றாலும், ஏடிஸ் காலை நேரத்தில் ரீங்கார மிட்டபடி உலவும். அப்போது மனிதர்களைக் கடிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் பாதிப்பின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
கடித்த இடத்தில் சிவப்பு நிற தடிப்புகள் உருவாகும். தொடர்ந்து தேய்க்கும் போது அந்த இடம் வீங்கும். திடீரென காய்ச்சல் வரும். காய்ச்சல் 103 டிகிரி வரை உயரும். பாதிக்கப்பட்டவர் சுருண்டு படுத்து விடுவார். தலைவலியோடு சுரப்பிகள் சுரப்பதில் சுணக்கம் வரும்.
விழிகள் அசையும் போது கண்களின் உள்ளே வலி வரும். பொதுவாக, இது மற்ற நோய் பாதிப்பின் போது வருவதில்லை. பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுப்பதால் உடலில் இருக்கும் நீர்ச் சத்து விரைவாக வெளியேறும். நோயாளி துவண்டு போவார்.
இதனால் உயிருக்கு ஆபத்து வருமா? என்பது குறித்து மருத்துவத் துறை வட்டாரத்தில் கேட்டபோது, ரத்தக் குழாய்களிலிருந்து வெளியேறும் ரத்தம் அதன் சுவர்களுக்கு வெளியே சென்று தங்கிவிடும். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு முக்கியமான உறுப்புகள் செயலிழக்கும். ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் கட்டுப்படுத்தினாலே டெங்குவை எளிதில் தடுத்துவிட முடியும். நோய் பாதித்தவர்களுக்கு சாதாரண 'பாராசிட்டமால்' மாத்திரைகள் கொடுத்தால் போதும் காய்ச்சல் குறைந்துவிடும் என்கின்றனர்.
-- எஸ்.அன்வர்.
-- குமுதம் வார இதழ். 13-11-2014.
-- இதழ் உதவி : P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

No comments: