ரால்ப்வால்டோடிரைன் என்ற தத்துவஞானி , ' பிரபஞ்சத்துடன் ஒன்றிப் போய் ' ( In tune with the in- finite ) என்ற தலைப்பில் ஓர் அற்புதமான நூலை எழுதியிருக்கிறார் . அதில் , " நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்போது , அதைச் செய்து முடிக்கும் தார்மிக வலிமை உடலில் பிறக்கிறது . திரும்பத் திரும்ப எண்ணும் ஓர் எண்ணம் நம்பிக்கை ஆகிறது . நம்பிக்கை நம்மைச் செயல்படத் தூண்டுகிறது . திரும்பத் திரும்பச் செயல்படும் பழக்கமாக மாறுகிறது . பழக்கங்கள் மனிதனின் குணநலங்களாக மாறுகின்றன . குணநலன் அவனது விதியை நிர்ணயிக்கிறது " என்று குறிப்பிடுகிறார் . இங்கே நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கிய விஷயம் , எப்படி எண்ணங்கள் நமது நம்பிக்கையாக மாறுகிறது என்பதுதான் .
ஒரு வீடு கட்ட வேண்டும் , ஒரு பெரிய தொழிலை உருவாக்க வேண்டும் , ஒரு தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் ஒரு சாதாரண எண்ணமாக மனத்துள் தோன்றுகிறது . ' நம்மிடம் என்ன இருக்கிறது ? வீடு கட்டப் பனம் வேண்டாமா ? போதுமான வருமானம் வேண்டாமா ?' என்று மனம் வரிசையாக எண்ணங்களை அடுக்குகிறது . நடுவில் ' முடியுமா ' என்ற ஒரு சந்தேகத்தையும் கிளப்புகிறது . ' நம்மிடம் இவ்வளவு சேமிப்பு இருக்கிறது , வங்கியில் இவ்வளவு கடனாக வாங்கலாம் . மாதாமாதம் இவ்வளவு என்று கட்டிவிடலாம் ' என்று இழையோடு இழையாக மற்றோர் எண்ணத் தொடர் ஓடுகிறது . ' ஏதோ முடியும் போலிருக்கிறதே !' என்ற தெம்பைக் கொடுக்கும் . உற்சாகத்தை ஊட்டும் ஓர் எண்ணம் ஊடே ஓடுகிறது
மலை உச்சியில் வீடு கட்டிக்கொள்பவர்கள் , சுலபமாக ஏறி இறங்க எப்படி வழி கண்டுபிடிக்பார்கள் தெரியுமா ?
தங்கள் மாட்டை மேய்வதற்காக அவிழ்த்து விட்டுவிடுவார்கள் . மடு அப்படி இப்படி என்று கவனித்து மலையிலிருந்து எளிதாக கீழிறங்க ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்து , தினமும் கீழே போய்ப் புல் மேய்ந்துவிட்டு வரும் .
மனமும் அப்படித்தான் . மனத்துக்கு ஒரு லட்சியத்தை , ஆசையைக் காட்டிவிடோமானால் போதும் ; அதை எப்படி அடைவதென்ற வழியைத் தானே அது கண்டுபிடித்துக் கொடுக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள் .
மனத்துக்கு ஒரு விஷயத்தின் உண்மை , பொய்களைப் பற்றி ஏதும் அக்கறை இல்லை . மனம் எப்படிப் பார்க்கிறதோ அப்படியே அதை ஏற்றுக் கொள்கிறது .
அதாவது மனம் நடப்பதை நம்பும்போது , உடலின் எல்லா உறுப்புக்களையும் தன் நம்பிக்கைக்கேற்ப இயங்கச் செய்கிறது .
---டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி , ஆனந்த்விகடன் . 20 - 05 - 2009 .
No comments:
Post a Comment