ரத்தினம் ( Sapphire ) :
அலுமினியமும் ஆக்ஸிஜனும் எக்குத்தப்பாகச் சேர்ந்த கலவைதான் ரத்தினம் . காலையில் அடர் நிறத்திலும் , மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிஜொலிக்கும் . மோசஸ் 10 கட்டளைகளைத் தந்தபோது கைகளில் ரத்தினத்தையும் தந்தார் என்பவர்கள் உண்டு . 17 - ம் நூற்றாண்டில் மக்கள் யாராவது சஃபையர் அணிந்தால் தலையைத் தனியே எடுத்துவிடுவார்கள் . ஏனெனில் , அப்போது அது ராஜாஆபரணம் . அலெக்சாண்டர் , அக்பர் போன்ற மன்னர்கள் சஃபையர் அணிந்திருந்தார்கள் என்கிறது வரலாற்றுக் குறிப்பு .
புஷ்பராகம் ( Topaz ) :
' ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .
முத்து :
கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !
பவழம் :
பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !
மாணிக்கம் :
மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !
வைடூரியம் :
க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !
மரகதம் :
பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .
கோமேதகம் :
நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . இதில் டூப்ளிகேட்டை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது . அதனாலேயே கோமேதக பிசினஸ் இந்தியாவில் செம ஹிட் !
---சரண் , நரேஷ் . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 இதழுடன் இணைப்பு
No comments:
Post a Comment