Wednesday, May 6, 2009

பிரபக்தி .

பக்தியிலும் சிறந்தது பிரபக்தி .
பிரபக்தி என்றால் சரணாகதி , அதாவது பகவானை அடைக்கலம் புகுதல் என்று பொருள் .இதைச் செய்வதற்குச் சில விதிகள் உள்ளன .
முதலாவதாக , மனம் , வாக்கு , காயம் மூன்றினாலும் அவனைச் சரண் அடைய வேண்டும் .
இரண்டாவதாக நம்முடைய குறைகளை வெளிப்படையாக அவனிடம் சொல்லவேண்டும் . அதனால்தான் திருமிழிசை ஆழ்வார் , " நான் நல்ல குலத்தில் பிறக்கவில்லை . நற்கலைகள் ஒன்றும் கற்கவில்லை . என் புலன்களையும் வெல்லவில்லை " என்று கூறினார் . அதே போல , ஆளவந்தார் , " எனக்குக் கர்ம யோகத்தில் அந்வயம் இல்லை . ஞானயோகத்தில் தொடர்பு இல்லை . பக்தி யோகமும் இல்லை . உன் சரணாரவிந்தம் ஒன்றுதான் தெரியும் " என்று கூறுகிறார் .
பகவானிடம் செல்லும் போது , நாம் படித்தவன் என்ற அகந்தை கூடாது . பகவானிடம் என்ன , யாரிடமுமே நாம் அகந்தையுடன் செல்லக்கூடாது .
ஸ்ரீ ரங்கத்துத் தெரு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தான் பட்டர் என்னும் ஐந்து வயதுச் சிறுவன் . இவன் கூரத்தாழ்வானின் மகன் . அப்பொழுது , பல்லக்கில் ஒரு பண்டிதர் வந்தார் . தம்மைவிடக் கற்றவர்கள் யாரும் கிடையாது என்று அவர் இறுமாப்புக் கொண்டிருந்தார் . பட்டர் கை நிறைய மணலை எடுத்து , அவரைப் பார்த்து , " இது எத்தனை மணல் ? " என்று கேட்டான் . மணலின் எண்ணிக்கையை எப்படிச் சொல்வது என்று அந்த பண்டிதர் திகைத்துக் கொண்டிருக்கையில் , அந்தச் சிறுவன் , அவரைப் பார்த்து , " ஒரு பிடி மணல் என்று சொல்லத் தெரியவில்லையே ? நீரும் ஒரு பண்டிதரா !" என்று கேட்டான் .
மூன்றாவதாக , பகவானுடைய குணங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் . அவன்தான் கதி என்று நம்ப வேண்டும் .
நான்காவதாக , சரணாகதி அடைந்து விட்ட பிறகு , வேறு ஒரு சாதனத்தையும் தேடக்கூடாது . தேடினால் , அது , " சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போல ஆகிவிடும் " என்கிறார்கள் பெரியவர்கள் .
இலங்கை சென்ற அனுமனை இந்திரஜித் பிரம்மாஸ்த்திரதினால் கட்டுகிறான் . அதற்கு மேலே அரக்கர்கள் அனுமனைக் கயிறு கொண்டு கட்டுகிறார்கள் . உடனேயே பிரம்மாஸ்திரத்தின் கட்டு போய் விடுகிறது >
-- பிள்ளைலோகம் , ஸ்தலசயனத் துறைவார் ஸ்வாமி , சென்னை , தியாகராயநகர் , வாணி மஹாலில் நிகழ்த்திய " திருப்பாவை" ச் சொற்பொழிவின் போது . வெள்ளி ,ஜன 19 , 1990 .

2 comments:

Bharathi Adipodi said...

பிரபக்தி அல்ல. பிரபத்தி எனத் திருத்திக் கொள்ளவும்.
சு.கோ

க. சந்தானம் said...

அன்பு S. KO .அவர்களுக்கு,
பிரபத்தி என்று திருத்திக்கொண்டேன் . மிக்க நன்றி !