நவராத்திரியின் தத்துவம் .
மனிதனுக்குத் தேவை மூன்று . அவையாவன : தனம் , கல்வி , வீரம் . அதனால்தான் அபிராமி பட்டர் சொன்னார் :
" தனம் தரும் , கல்வி தரும் , ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் ...." என்று . இந்த மூன்று தேவதைகளையும் வழிபடுவதற்காகத்தான் நவராத்திரி . முதல் மூன்று நாள் துர்க்கையையும் , இடை மூன்று நாள் லட்சுமியையும் , கடைசி மூன்று நாள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம் . இப்படி வழிபட்டால் தனம் , கல்வி , வீரம் மூன்றும் கிடைக்கும் . அதன் காரணமாக வெற்றி கிடைக்கும் . அதனால்தான் பத்தாவது நாளை விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம் .
படிகள் வைப்பதிலும் ஒரு தத்துவம் உள்ளது . பொதுவாக ஒன்பது படிகள் வைப்பார்கள் . முதல் படியில் புல் , இரண்டாவது படியில் இரு அறிவுப் பிராணிகள் , மூன்றாவது படியில் மூன்று அறிவுப் பிராணிகள் என்று இப்படி கொண்டு போய் , ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த மனிதன் இருப்பான் , ஏழாவது படியில் மனிதனுக்கு மேம்பட்ட மகரிஷிகள் , எட்டாவது படியில் தேவர்கள் , ஒன்பதாவது படியில் மும்மூர்த்திகளும் அவர்களுடைய தேவியரும் காட்சியளிப்பர் . மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று , கடைசியில் தெய்வம் ஆகவேண்டும் என்கிற தத்துவத்தை இப்படிகளில் உள்ள பொம்மைகள் காண்பிக்கின்றன .
நவராத்திரி கொலுவை பராசக்தியின் விசுவரூப தரிசனம் என்றே கூறலாம் . எல்லாப் பொருள்களிலும் நான்தான் இருக்கிறேன் என்று காட்டுகிறாள் ஈஸ்வரி , கொலுப் பொமைகள் மூலம் .
-- சிதம்பரம் சுவாமிநாதன் . விசாலாட்சி தோட்டம் , ஆன்மிகப் பேரவையில் ஆற்றிய " நவராத்திரி வைபவம் " என்ற சொற்பொழிவின் போது . ஞாயிறு , அக் 1 , 1989 .
No comments:
Post a Comment