தமிழ்த்தாய்க்கு புதுப்பாடலா ?
' இந்திர விழா ' என்ற திரைப்பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசிய பேச்சு , வெளிநாடுவாழ் தமிழர்கள் மனதில் பிரிவினையைத் தூண்டுவதாக இருந்தது . வெளிநாடுகளில் மொழி , இனம் , என வேறுபாடுகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் .திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக்கொண்டிருக்கும் எந்தத் தமிழனும் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் என்று கேட்கவில்லை .
' நீராரும் கடலுடுத்த ' என்ற பாடலில் எந்தக் குறையும் கண்டுபிடிக்கவில்லை , பாட முடியாமல் தவிக்கவும் இல்லை . தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோண்மனியம் சுந்தரனார் பெயரில் தமிழக அரசு பல்கலைக்கழகம் ஏற்படுத்தி கவுரவித்திருக்கிறது . அப்படிப்பட்ட ' நீராரும் கடலுடுத்த ' என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை வெளிநாடுகளில் பாட முடியாதாம் . ஏனெனில் அப்பாடலில் இந்திய எல்லைகள் வருகிறதாம் . அதனால் ஏ . ஆர் . ரகுமான் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வைரமுத்து புதிதாய் எழுதப்போகிறாராம் .ஏ .ஆர் . ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் , உலகப் புகழ்பெற வில்லையா ? அது தமிழ்ப்பாடலா ? அது பாரதத்தாய் வாழ்த்து !
' ஆனந்த மடம் ' நாவலில் இந்த வந்தே மாதரம் பாடலைக் கண்டு எடுத்தவர் ஆங்கிலநாட்டு சகோதரி நிவேதிதை . இந்த வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக வந்திருக்க வேண்டும் . ஆனால் , அப்பாடலில் நாட்டை காளியாகவும் , பராசக்தியாகவும் வர்ணிக்கப்படுகிறது . இதை இஸ்லாமியர்கள் விரும்பவில்லை . சுதந்திர இந்தியா தன்னை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று அறிவித்துக் கொண்டது . அதனால் , ' வந்தே மாதரம் ' தேசியகீதமாக பங்குபெறவில்லை .ஆனால் , ஓர் இஸ்லாமிய தமிழனால் அதே வந்தே மாதரம் உலகப் புகழ் பெற்றுவிட்டது . செப்புமொழி பதினெட்டுடையாள் --- எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்றான் பாரதி .
சினிமாவுக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர் , தேசப்பற்றில்லாமல் குறுகிய தனித்தமிழ்நாடு என்ற எண்ணத்தில் பேசுவதால் தமிழர்களை வட இந்தியர்கள் கண்டுகொள்வதில்லை . காஷ்மீரிகளை தென்னிந்தியர்கள் கண்டுகொள்வதில்லை .பாரதத்தாயே தமிழ்த்தாய் . வெளிநாடுவாழ் தமிழர்களுக்கென்று தமிழ்த்தாய் வாழ்த்து எழுதி விஷ விதையை விதைக்க வைரமுத்து போன்றோர் முயலவேண்டாமே .
--- எஸ் . ராமச்சந்திரன் , வேலூர் . தினமலர் .04 -03 - 2009 .
No comments:
Post a Comment