வெற்றியின் ரகசியம் .
குருக்ஷேத்திரத்தில் , மகாபாரதப் போருக்காக , கௌரவ சேனை ஒரு பக்கமும் , பாண்டவ சேனை இன்னொரு பக்கமும் அணிவகுத்து நிற்கின்றன . போர் ஆரம்பிக்கப் போகும் சமயம் . அப்பொழுது என்று தருமர் தம் கவசத்தைக் கழற்றித் தேரில் வைத்தார் . தம் ஆயுதங்களையும் வைத்தார் . தேரிலிருந்து இறங்கி பீஷ்மரை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தார் . அவருடைய செய்கையின் நோக்கம் புரியாமல் , அவருடைய சகோதரர்களும் , கிருஷ்ணரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள் . " எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் !" என்று கேட்டதற்கு அவர் பதிலே சொல்லவில்லை .
இதைப் பார்த்து கௌரவ சேனையில் ஒரே குதூகலம் ! " நம் படை பலத்தைப் பார்த்து தருமர் பயந்துவிட்டார் ! அதனால் பீஷ்மரிடம் சரணாகதி அடையச் செல்லுகிறார் " என்று நினைத்தார்கள் .
தருமர் நேரே பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கினார் . " தாத்தா ! நாங்கள் தங்களோடு யுத்தம் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது . அதற்காக எங்களை மன்னிப்பதோடு , அதற்கு உத்தரவும் , தங்கள் ஆசியும் வழங்க வேண்டும் " என்று சொல்லி கை கூப்பி நின்றார் .
இதைக் கேட்டு பீஷ்மர் மகிழ்ந்து , " குழந்தாய் ! நீ மட்டும் இப்படி என்னை அனுமதி கேட்டிராவிட்டால் நான் உன்னைச் சபித்திருப்பேன் . என் பூரண ஆசிர்வாதம் உனக்கு இருக்கிரது .நீதான் வெற்றி பெறுவாய் . உனக்கு வேறு என்ன வேண்டும் . கேள் " என்றார் .
" தங்களை நான் வெற்றி கொள்ளுவது எப்படி ?" என்று தருமர் கேட்டார் .
" இன்னொரு சமயம் சொல்லுகிறேன் " என்றார் பீஷ்மர் .
பிறகு தருமர் துரோணரை வணங்கி நின்றார் . அவரையம் " தங்களை வெல்லுவது எப்படி ! " என்று கேட்டார் . அதற்குத் துரோணர் , " என் கையில் வில் உள்ளவரை என்னை யாராலும் வெல்ல முடியாது . ஆனால் , எனக்குப் பிடிக்காத செய்தி எதையாவது கேட்டால் அப்பொழுது நான் வில்லைக் கீழே வைத்து சமாதியில் ஆழ்ந்து விடுவேன் . அப்பொழுது என்னைக் கொல்லலாம் : என்றார் .
பிறகு தருமர் குலகுரு கிருபாச்சாரியாரை வணங்கினார் . அவரை எப்படி வெல்லுவது என்று கேட்க தருமரால் முடியவில்லை . துக்கம் அவர் தொண்டையை அடைத்தது . அவர் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கிருபாச்சாரியார் , " என்னை யாராலும் வெல்ல முடியாது . ஆனால் நீதான் வெற்றி பெற வேண்டும்ம் என்று நான் தினம் காலை பகவானை வேண்டிக் கொள்ளுவேன் " என்றார் .
யுத்த சமயத்திலும் கூட , பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் , அவர்களுடைய ஆசியைப் பெற வேண்டும் என்கிற தருமரின் உத்தமமான குணம்தான் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது என்று சொல்லவும் வேண்டுமா ?
-- மகாபாரதம் பீஷ்ம பர்வத்திலிருந்து . வெள்ளி , நவம் 3 , 1989 .
No comments:
Post a Comment