Tuesday, May 19, 2009

சிதம்பர ரகசியம் ?!

பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் .
நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!
" சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"
" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .
இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும் !" --- ஆனந்தவிகடன் . 25 -02 -2009 .

2 comments:

Bharathi Adipodi said...

தில்லையில் ஆடற்பெருமானின் திருமுன்னுக்கு அடுத்த அறையில் ரகசியம் என்று அழைக்கப்படும் ஒரு வெற்றறை உள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் ஆகாய வடிவில் விளங்கும் இறைவனின் இடம் இது என்று தத்துவ விளக்கங்கள் கூறப்பட்டபோதிலும், இது ஒரு சுரங்கப் பாதையை அடைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அதனுள் பழைய காளி வழிபாட்டுத் தலம் இருந்திருக்கலாம் என்று டாக்டர் சுவாமி அவர்களை மேற்கோள் காட்டி முனைவர் ஆ.பத்மாவதி கூறுகிறார். [சைவத்தின் தோற்றம் ஆ.பத்மாவதி பக். 51] சித்சபையின் ரகசிய மண் சுவருக்குப் புனுகுக் காப்பு அணிவிக்கும் வழக்கம் உள்ளதாகக் கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. [ஸ்ரீநடராச தத்துவம் – வை.தட்சிணாமூர்த்தி பக். 255]
சு.கோதண்டராமன்

க. சந்தானம் said...

அன்பு சு .கோ. அவரகளுக்கு , வணக்கம் .
தில்லை ஸ்ரீ நடராஜ தத்துவம் பற்றிய ஆ. பத்மாவதி மற்றும் வை . தட்சிணாம்மூர்த்தி இருவரும் எழுதிய கட்டுரைகளிலிருந்து ஆதாரத்துடன் தெரியப்படுத்தியுள்ளீர்கள் . நான் ஆனந்தவிகடன் 25 - 02 - 2009 இதழில் இருந்து குறிப்பிட்டேன் . சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி !