" எங்கள் வீட்டிற்குத் திருக்குறள் அவதானி சுப்பிரமணிய தாஸ் வந்து பேசிக் கொண்டிருந்தார் . மணி 11. 30 ஆயிற்று . என் மகள் வந்து , ' அப்பா ! இன்றைக்கு ஒன்பதா ? ' என்று கேட்டாள் . எனக்கே தூக்கிப்போட்டது . கொஞ்ச நேரம் யோசித்து , ' ஆமாம்மா ' என்றேன் . அவள் போய்விட்டாள் . இவர் யோசித்தார்... ' என்னடா ஒன்பதா என்று கேட்கிறாள் . யோசித்து ஆமாம் என்று சொல்லுகிறாரே ' என்று . உடனே என் மகளை " இங்கே வா அம்மா " என்றார் . வந்ததும் ' ஒன்பது இல்லையம்மா . நான் 95 - லே இருக்கிறேன் ' என்றார் . அப்படியே வெட்கிப் போய்விட்டது பிள்ளை .
என்ன பொருள் ? ' அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாரே , புதிதாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே , இன்றைக்கு அவருக்கு உணவு தயாராக வேண்டுமா ?' என்று கேட்டாள் . 9 -ம் அதிகாரம் விருந்து . ' ஆமாம்மா ' என்றேன் . போனாள் . இதை அவர் கண்டுபிடித்து விட்டார் . அவர் அவதானி அல்லவா ? ' வா அம்மா ' என்றார் . வந்தவுடன் ' நான் 95 - லே இருக்கிறேன் ' என்றார் . 95 என்றால் மருந்து . ' நான் மருந்து சாப்பிடுகிறேன் விருந்து வேண்டாம் ' என்றார் . திருக்குறள் தலைப்பு 133 - யும் படித்து விட்டீர்களானால் நீங்களும் இப்படித் திருக்குறள் பரிபாஷையில் பேசலாம் ".
--- கி. ஆ. பெ. விசுவநாதம் . ஆனந்தவிகடன் ( 26 . 12 . 1965 ).
No comments:
Post a Comment