Friday, December 17, 2010

வைரமுத்து -- பாடல் வரிகள் !

' ராவணன் ' படத்தில் இடம்பெறும் ' கள்வரே கள்வரே ' பாடலில் ஓர் இலக்கணம் சொல்லியிருக்கிறேன் . ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகிறதே... வலிமிகு வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா ! என்று எழுதியிருக்கிறேன்.
மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், தமிழில் வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள், மிகா இடங்கள் என்பதை வலிமிகு இடம், வலிமிகா இடம் என்று சொல்வது தமிழ் இலக்கண மரபு. உதாரணமாக வினைத் தொகையில் வலி மிகாது. ' சுடுசோறு ' என்பதை ' சுடுச் சோறு ' என்றோ, ' ஊறுகாய் ' என்பதை ' ஊறுக்காய் ' என்றோ எழுதக் கூடாது. ' அலை கடல் ' என்பதை ' அலைக் கடல் ' என்று எழுதக் கூடாது. அதாவது வினைத் தொகையில் வலி மிகாது. சுட்டெழுத்தில் வலி மிகும். ' அந்தப் பக்கம்..' '.இந்தப் பக்கம்.' ' அந்தப் பெண் ' ' இந்தப் பெண் ' என சுட்டெழுத்தில் வலி மிகும். இதை நயமாக ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் ' தமிழுக்குத் தெரிகிறதே, நீங்கள் என்னை அணைக்கிற போது ' வலிமிகு இடங்கள் வலிமிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகிறதா ' என காதல் கொண்டு மனைவி கேட்பதாக எழுதியிருக்கிறேன்.
' எந்திரன் ' படத்தில், பாட்டு முழுக்க விஞ்ஞான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ' வண்ணத்துப்பூச்சி கால்களால் ருசி அறியும் இந்த காதல் பூச்சி கண்களால் ருசி அறியும் ! ' என்பது போன்ற வரிகள் விழுந்திருக்கின்றன .
--- வைரமுத்து , குமுதம் . 07. 07. 2010.

No comments: