இமயமலையில் இலந்தை மரக்காடுகள் நிறைந்த நாராயண பர்வதம் என்ற பகுதியில் , அலக்நந்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது பத்ரிநாத் திருத்தலம் . ஹரித்வாரிலிருந்து 300 கி. மீ. தொலைவில் உள்ளது இந்த புனிதத் தலம் .
சம்ஸ்கிருதத்தில் பத்ரி என்றால் இலந்தை . இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்று பெயர் . இலந்தை மரத்தின் கீழே ஆச்சாரியர் ரூபத்தில் பெருமாள் அமர்ந்தருளிய தலம் என்பதால் கோயிலுக்கு பத்ரிகா ஆஸ்ரமம் என்றும் பெயர் .
கோயில் அமைப்பு
இக்கோயிலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் . ஒன்று , பத்ரிநாதர் குடிகொண்டுள்ள மூலஸ்தானம் . இந்த கர்ப்பகிருகம் பொன் தகடுகளால் வேயப்பட்ட மேல் கூரையோடு சேர்ந்தது .
இரண்டாவது , தரிசன மண்டபம் . இங்கேதான் பூஜை மற்றும் இதர சடங்குகள் நடைபெருகின்றன .
மூன்றாவது , சபா மண்டபம் . இங்குதான் சுவாமி காலையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் .
தலச் சிறப்பு .
கோயில் அமைந்துள்ள வெண்பனி படர்ந்த மலையின் அழகிய சூழல் , ஆன்மிக அமைதியை அளிக்கும் , தியானம் செய்ய உகந்த இடம் இது .
பத்ரிநாத் கோயில் பின்பக்கம் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து நீலகண்டம் என்ற மலைஉச்சி பகுதியைப் பார்ப்பது , கண்கொள்ளாக் காட்சி . நீலகண்ட உச்சியின் அருகிலேயே நரநாராயணர்கள் இருப்பதாக ஐதீகம் .
பத்ரிநாத் ஆலயத்திற்கு எதிரில் உள்ள தப்தகுண்டம் தீர்த்தம் , ஒரு வெந்நீர் ஊற்றாகும் .
பத்ரிநாதரின் விக்ரகம் கறுப்பு நிற சாளக்கிராமத்தில் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போல அமைந்துள்ளது . பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது திரையிடுவதில்லை .
மூலவர் : பத்ரி நாராயணர் .
தாயார் : அரவிந்தவல்லி .
தீர்த்தம் : தப்த குண்டம் ( வெந்நீர் ஊற்று ).
விமானம் : தப்த காஞ்சந விமானம் .
தல விருக்ஷம் : பத்ரி ( இலந்தை ).
மங்களாசாசனம் : பெரியாழ்வார் -- 11 பாசுரங்கள் .
--- தினமலர் , ஜூலை 8 . 2010 .
No comments:
Post a Comment