Sunday, February 21, 2016

யுவான் சுவாங்.

   உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள்.  அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன.  ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங்.
     நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம்.  அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல்.  புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான்.  ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும் சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல.  கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம்... ஆகியவை.
     தன் 17 வருட ஆன்மிகப் பயணத்தில் இந்தியாவில் இருந்து யுவான் சுவாங் எடுத்துச் சென்றவை, 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களும், 115 புனிதப் பொருட்களும், புத்தரின் பொற்சிலை ஒன்றும்தான்.  கடும்கட்டுப்பாட்டை மீறி சீனத் தேசத்தை விட்டு வெளியேறி வந்த யுவான் சுவாங், கி.பி.645-ம் ஆண்டு மீண்டும் சீனா வந்தபோது கோலாகலமாக வரவேற்கப்பட்டதும், சீன தேசத்தின் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தபோது தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்ததும், இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சமஸ்கிருத நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்க ஆட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்து 65-வது வயதில் இறப்பதுவும், யுவான் சுவாங்கின் வாழ்வு ஒரு கனவுபோல வாசகன் முன் விரிகிறது.
-- 'போதியின் நிழல்'  நூலில், அசோகன் நாகமுத்து.
-- ஆனந்த விகடன். 16-10-2013.  

No comments: