--- உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங் , துப்பாக்கி சுடுவதில் கில்லாடி . முதல் உலகப் போரின் சமயம் , குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர்காத்தார் .
--- புவிஈர்ப்பு சக்தியை ஆப்பிளினால் அறிந்த ஐசக் நியூட்டனுக்கு , அவருடைய அம்மாவோ , அப்பாவோ எதுவுமே சொல்லித் தந்ததில்லையாம் . காரணம் , நியூட்டன் பிறப்பதற்கு மூன்று மாதம் முன்பே அப்பா காலமானார் . நியூட்டனின் மூன்றாம் வயதில் அவரைப் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு , அம்மா மறுமணம் செய்துகொண்டு தொலைதூரம் போய்விட்டார் .
--- சாளேஸ்வரக்காரர்களின் வரப்பிரசாதமாக மூக்குக் கண்ணாடி கண்டுபிடித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் , நாணயங்களை மட்டுமே நம்பியிருந்த இந்த உலகத்தைத் தைரியமாக ரூபாய் நோட்டுக்கு மாறவைத்த பெருமைக்கும் உரியவர் . பின்னே... சுலபத்தில் கள்ளநோட்டு தயாரிக்க முடியாத அளவுக்கு ஒரிஜினல் அமெரிக்க டாலரைத் தயாரிக்கும் சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவராச்சசே . ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இன்றும் அமெரிக்க மக்கள் போற்றும் அன்புத் தலைவர் இவர் .
--- ' குரங்கில் இருந்து வந்தவன்தான் மனிதன் ' என்று நம் பூர்வீகத்தைத் சொன்ன சார்லஸ் டார்வினுக்கு மொத்தம் பத்து குர... ஸாரி , குழந்தைகள் ! விஞ்ஞானி என்றாலே குடும்ப விஷயத்தில் விட்டேத்தி என்பது இவரைப் பொறுத்தவரை பொய் ! நெருங்கிய சொந்தத்திலேயே திருமணம் முடித்திருந்ததால் , தன் குழந்தைகளுக்கு லேசாகக் காய்ச்சல் வந்தால்கூட பதறிப் போய் , அவர்கள் பக்கத்திலேயே இருப்பார் . பத்தில் இரண்டு குழந்தைகள் அல்பாயுசில் இறந்துபோனது இவரால் தவிர்க்க முடியாத சோகம் .
--- தற்போதைய கம்யூட்டரின் மூல விதையான டிஃபரன்ஸ் இஞ்சினை வடிவமைத்த சார்லஸ் பேபேஜூக்கு எட்டாவது வயதில் கடும் காய்ச்சல் ஏற்பட்டபோது , சிறுவனைக் கட்டாயப்படுத்தி அதைப்படி , இதைப்படி என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்காதீர்கள் என்று டாக்டர்கள் புத்தி சொன்னார்களாம் . ஆக , ' ஃப்ரீயா வுடு மாமே ' தத்துவத்தில் வளர்ந்தாலும்கூட , குழந்தைகள் மகா புத்திசாலியாக இருக்கும் என்பதற்கான உதாரணம் இவர் .
--- மோனலிஸா ஓவியம் தந்த லியனார்டோ டாவின்சி ஒரு சூப்பர் விஞ்ஞானியும் கூட ! விமானமே கண்டுபிடிக்காத காலகட்டத்தில் பாராசூட் பற்றிக் கற்பனை செய்தவர் ! அறிவியலின் மீதிருந்த தாகத்தால் , மதகுருமார்களின் கட்டுப்பாடுகளை மீறி , கல்லறையில் புதைக்கப்பட்ட சடலங்களை ரகசியமாகத் தோண்டி எடுத்து , மனித உடற்கூறுகளை அறுத்துப் பார்த்துப் படமாக வரைந்து வைத்துவிட்டுப் போனார் டாவின்ஸி !
--- சார்பியல் தத்துவத்தைச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் , ஆரம்பத்தில் காப்புரிமை ஆபீஸில் கிடைத்த சாதாரண உத்தியோகதையே ஆசையாகப் போய் ஏற்றுக்கொண்டார் . பிற்பாடு உலகமே கொண்டாடும் விஞ்ஞானியாக அவர் உருவெடுத்த பிறகு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிகூட அவருக்கு தங்கத் தட்டில் வைத்து நீட்டப்பட்டது . அதை அவர் ' ஜஸ்ட் லைக் தட் ' மறுத்தது வேறு விஷயம் !
--- மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞானி மட்டுமின்றி , பக்கா வியாபாரி . அவர் தொழிற்சாலையில் புதுமை கண்டுபிடிப்புகள் மெகா புரொடக்க்ஷன் ஆகி , லாபம் குவிந்தது தனிக் கலை , ' ஜெனரல் எலெக்ரிக் ' உட்பட 14 கம்பெனிகளைத் தோற்றுவிக்கக் காரணமாக விளங்கிய எடிசன் , சின்ன வயதிலேயே ரயிலில் மிட்டாய் -- காய்கறி -- பேப்பர் விற்ற அனுபவம் கொண்டவர் .
---ஆனந்தவிகடன் . 28 - 01 - 2009
No comments:
Post a Comment