' உங்கள் நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் ' என்று ஓர் அறிஞர் சொன்னதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் . நண்பர்கள் நமது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் . வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறவர்கள் நண்பர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் .
உடல் வளர்வதற்காக வாய் உண்கிறது . வாய் உண்பதற்காக கை உதவுகிறது . கண்கள் உறங்க காது இசையைக் கேட்கிறது . கால்கள் சரியாக நடக்க கண்கள் பார்க்கின்றன . இடுப்பில் உள்ள ஆடை நழுவும்போது கை உதவுகிறது . உடலில் காயம் பட்டால் கண் அழுகிறது . இப்படித்தான் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பர் .
நல்ல ஆலோசனைகளைச் சொல்ல , கவலைகளைப் பகிர்ந்து கொள்ள , தொழில்களில் பங்குதாரர்களாக , நலிவு ஏற்படும்போது தாங்கிப் பிடிக்க , விருந்துகள் மூலம் மனச் சோர்வைப் போக்க , தகவல்களைப் பரிமாற , ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க இப்படி இன்னும் எத்தனையோ முறைகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர் . உறவினர்கள் நம்மிடம் எப்போதும் , எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருப்பர் . நண்பர்கள்தான் நமக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பர் .
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்ய வேண்டும் . அவ்வாறு தேர்ந்தெடுக்கும் வரை நிதானம் வேண்டும் . தேர்ந்தெடுத்த பின் உறுதியாக இருக்க வேண்டும் .தேவையில்லாத சந்தேகங்களுக்கு இடம் தரக்கூடாது . நல்ல நண்பர்கள் இன்பத்திலும் , துன்பத்திலும் , தோல்வியிலும் உடன் இருப்பர் . நல்ல நண்பர்கள் கண்ணாடி போன்றவர்கள் . முக அழகையும் காட்டுவர் ; அழுக்கையும் காட்டுவர் . பாராட்டும்போது பாராட்டுவர் . கண்டிக்கும்போது கண்டிப்பர் . கெட்ட நண்பர்கள் நம்மைப் புகழ்ந்து கொண்டே செயலைச் சாதித்துக் கொள்வர் .
' உன்னை விட உயர்வான மனிதரைத் தவிர மற்றவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டாம் ' என்பார் சிந்தனையாளர் கன்பூஷியஸ் . நல்ல நண்பன் வெயில் காலத்தில் விசிறியாகவும் , குளிர்காலத்தில் குளிர்காயும் நெருப்பாகவும் இருப்பான் . மனைவியைவிட நண்பனிடமே சில விஷயங்களை மனம் விட்டுப் பேச முடியும் . பதற்றமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் .
ஒருமுறை லியோ டால்ஸ்டாய் ஒரு பூங்காவிற்குச் சென்றார் . எதிரில் வந்தவரைப் பார்த்து ' ஹலோ எப்படி இருக்கிறீர்கள் ' என நலம் விசாரித்தார் . வந்தவர் சிடுமூஞ்சி . ' நாம் இவரை இதுவரை சந்தித்ததே இல்லை . என்ன ஹலோ வேண்டிக் கிடக்கிறது ' என்றபடி போய் விட்டார் . மறுநாளும் டால்ஸ்டாய் பூங்காவிற்குச் சென்று மீண்டும் அவரை நலம் விசாரித்து , ' நேற்று நாம் இருவரும் சந்தித்தோம் . தெரியாது என்று சொல்லி விடாதீர்கள் ' என்று சொல்ல அந்த நண்பர் சிரித்து விட்டார் . இருவரும் நண்பர்களாயினர் .
கொடுத்ததை மறப்பதும் , பெற்றதை நினைப்பதும் நல்ல நட்புக்கு அடையாளம் என்கிறார் திருவள்ளுவர் . புதிய ஆடை உடலுக்கு அழகு . ஆனால் , பழைய நண்பனே வாழ்க்கைக்கு அழகு . நாம் வளமாக இருக்கும்போது நண்பர்களுக்கு நம்மைத் தெரியும் . நாம் வறுமையில் இருக்கும்போது நமக்கு நண்பர்களைத் தெரியும் . நல்ல நட்புக்கு எல்லாச் சுமைகளும் லகுவானவை . இவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு வெற்றிகளைப் படைப்போம் .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . ஜூலை 2009 .
4 comments:
நல்ல நண்பராக இருப்பாரோ என்ற சந்தேகம் கடைசி வரை ஒரு நல்ல நண்பரை பெற்றுத் தராது.
மேலும் நண்பரை விட மனைவியிடம் எதையும் பேசலாம். நண்பர் எல்லாம் ஓரளவுக்கு தான்.
இருபத்தி நான்கு மணி நேரமும் நண்பர் உடன் இருக்க இயல்வதில்லை.
உறவுகளும் அவசியம். நட்பை பிரதானப்படுத்தி மற்றவைகளை சிறுமைப்படுத்துவது போன்ற ஒரு தோற்றம் நட்புக்கு அழகு சேர்க்காது எனவும் பொருள் கொள்ளவும். ஏனெனில் உறவுகள் ஒருவகையில் நட்புகளே.
வேர்ட் வெரிஃபிகேஷன் இல்லாதிருப்பின் நலம்.
அன்பு , வெ. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ! ' word verification இல்லாதிருப்பின் நலம் ' என்று சொல்லியுள்ளீஈர்கள் . கூடுமானவரை அதைப் போல் பார்த்துக்கொள்கிறேன் .
அன்பு , வெ. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ! ' word verification இல்லாதிருப்பின் நலம் ' என்று சொல்லியுள்ளீஈர்கள் . கூடுமானவரை அதைப் போல் பார்த்துக்கொள்கிறேன் .
அன்பு , வெ. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ! ' word verification இல்லாதிருப்பின் நலம் ' என்று சொல்லியுள்ளீஈர்கள் . கூடுமானவரை அதைப் போல் பார்த்துக்கொள்கிறேன் .
Post a Comment