Saturday, January 16, 2010

மாவீரன் அலெக்ஸாண்டர் !

அலெக்ஸாண்டர் பல சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றிய பின் வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் . அவன் பயணத்தின் போது , திடீரென்று தீவிரமான நோய் ஒன்று அவனைத் தாக்கியது . உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலை . தன் தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மரணம் அடையப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது . தன் தளபதிகளை அழைத்தான் .
' என் கடைசி ஆசைகள் மூன்றைத் தவறாமல் நிறைவேற்றிவையுங்கள் ' என்றான் . ' என் சவப்பெட்டியை என் மருத்துவர்கள்தாம் சுமக்கவேண்டும் . என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும் , மணியும் , நான் வெற்றிகொண்ட மற்ற நவரத்தினங்களும் தூவப்பட வேண்டும் . என் இரு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும் .
தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர் .
' மாமன்னா . இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன ?'
அலெக்ஸாண்டர் சொன்னான் : ' வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்களை மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன் . எப்பேர்ப்பட்ட மாமன்னராக இருந்தாலும் , மருத்துவர்களால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்க வேண்டும் என்றேன் . ஒரு குன்றிமணி தங்கம்கூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவிக்கவே வழி எங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன் . இந்த பூமிக்கு வந்தபோது ஒன்றுமற்றவனாக வந்தேன் . விட்டுப் போகும்போதும் , ஒன்றுமற்றவனாகப் போகிறேன் என்பதை , சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும் ' என்றான் அலெக்ஸாண்டர் . இதுதான் வாழ்வின் உண்மை .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 16 - 09 - 2009

No comments: