காட்டில் உள்ள மிருகங்களில் மிக முக்கியமானது யானை என்கிறார்கள் காட்டுயிர் ஆய்வாளர்கள் . அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு . யானைக்கூட்டம் என்பது ஒரு இடத்தில் நிற்காது . காடு முழுக்க திரிந்து கொண்டே இருக்கும் . அப்படிக் காடு முழுக்கத் திரிவதால் அதன் பிரம்மாண்டமான பாதங்கள் பட்டு புதிய புதிய காட்டுவழிப் பாதைகள் உருவாகும் . யானை இப்படிச் செல்லும் பாதையை ' வலசை ' என்று சொல்வார்கள் .
இந்த வலசைப்பாதை வழியாகத்தான் மற்ற விலங்குகளும் செல்லும் . அதனால் , காட்டுக்குள் நல்ல இடப்பெயர்ச்சி ஏற்பட்டு பல்லுயிரினம் வளர்கிறது . ( பயோடைவர்சிட்டி ) அதே போல் போகிற போக்கில் தான் சாப்பிடும் மர இலைகள் , கிளைகள் , பூக்கள் , செடி கொடிகளையும் யானை வீசிக் கொண்டே போவதால் அங்கெல்லாம் புதிய தாவரங்கள் முளைத்து காடு இன்னும் செழுமை பெறுகிறது . இதுதான் யானை காட்டின் வளத்துக்குச் செய்யும் மிகப்பெரும் சேவை . அதனால்தான் அவை காட்டைச் சுற்றிச் சுற்றி வருகின்றன . அப்படிப்பட்ட காட்டை நாம் என்ன செய்கிறோம் ? வீடுகள் , விவசாயம் என்கிற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்து தோட்டங்கள் போடுகிறோம் . பண்ணைகளைக் கட்டுகிறோம் . என்னுடைய ஏரியாவுக்கு வந்து என்னை ஏன் தொல்லை செய்கிறாய் என்று கேட்டுத்தான் யானைகள் அட்டகாசம் செய்கின்றன . அதற்குச் சொந்தமான நிலத்தை நாம் விட்டுக் கொடுத்தாலே அவை நம்மை டிஸ்டர்ப் செய்யாமல் அமைதியாக வாழும் .
யானைகள் காட்டை விட்டு நாட்டுக்குள் வந்து ' அட்டூழியம் ' ( ! ) செய்வதாக அடிக்கடி செய்திகளைப் பார்க்கிறோம் . அவை நாட்டுக்குள் புகவில்லை . நாம்தான் அதன் காடுகளை ஆக்ரமித்து விடுகிறோம் . அந்தக் கோபத்தில்தான் அவை அப்படிச் செய்கின்றன .
--- அகிலன் சித்தார்த் . சூரிய கதிர் . டிசம்பர் 1 - 15 , 2009 .
No comments:
Post a Comment