* தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது .
* தஞ்சாவூர் என்ற சொல்லுக்கு குளிர்ந்த நிலப்பரப்பினைக் கொண்ட ஊர் என்று பொருள் .
* தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூருக்கு பெருமை சேர்ப்பது ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் என்ற பெருவுடையார் கோயில் .
* ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு 17-ம் நூற்றாண்டுக்குப் பின் பிரகதீஸ்வரம் என பெயர் மாற்றமடைந்தது இந்தக் கோயில் .
* மூலவரான பிரகதீஸ்வரர் லிங்க வடிவினர் . உயரம் 13 அடி. வட்ட ஆவுடை 54 அடி சுற்றளவு. மத்தியப்பிரதேச நர்மதை ஆற்றங்கரையில் உள்ள மலையிலிருந்து எடுத்து வந்த கல்லால் அந்த பிரமாண்ட லிங்கம் செய்யப்பட்டது.
* இங்குள்ள லிங்கம் போன்றே முன்புறம் உள்ள நந்தியும் பிரமாண்டம்தான். உயரம் 12 அடி, நீளம் 9 அடி, அகலம் 6 அடி. ஒரே கல்லால் ஆனது.
* சிவலிங்கம் மூன்று அமைப்புகளைக் கொண்டது. அடியில் நான்கு பட்டை தூண் வடிவை பிரம்மனாகவும், இடையே எட்டுப் பட்டை வடிவை விஷ்னுவாகவும், வட்டத் தூணை ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரமசிவம் என்றும் அழைப்பர்.
* கருவூரார் என்ற சித்தரின் அறிவுரைப்படி 10ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. கோபுரம் தரையிலிருந்து 216 அடி உயரம். நான்கு பட்டை வடிவில் கூம்பிச்செல்லும் விமானம், 26க்கு 26 அடி சதுர தளத்தில் நிற்கிறது. இதன் மேல் உள்ள அரைப்பந்து வடிவச் சிகரத்தின் உச்சியில் 12 அடி உயரமுடைய தங்கமுலாம் பூசப் பெற்ற செம்புக் கவசம் உள்ளது.
* கோபுர விமானம் வாய் அகலமான கூம்பை தலைகீழாகக் கவிழ்த்தது போன்ற அமைப்புடையது. இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பதும் தவறான செய்தியாகும்.
* இக்கோயிலிலிருந்து ராஜராஜன், அவனது பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோரது செப்புச் சிலைகள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கௌதம் சாராபாய் கலைக்கூடத்தில் உள்ளன.
* பெரிய கோயிலின் முதல் கோபுர வாயிலுக்கு கேரளாந்தன் வாயில், 2ம் வாயிலுக்கு ராஜராஜன் வாயில், தெற்கு கோபுர வாயிலுக்கு விக்ரம் சோழன் வாயில் என்றும் பெயர்.
* கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான இரண்டு துவாரபாலகர்கள் சிற்பங்களாக பிரமாண்டம் காட்டுகிறார்கள்.
* இக்கோயில் யுனஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
--- தினகரன் , 12. 06. 2010.
No comments:
Post a Comment