Tuesday, November 23, 2010

இரு நதிகள் !

அந்த இரு நதிகள் !
அந்த நாட்டில் இரண்டு கடல்கள் இருக்கின்றன. வடக்கில் அமைந்திருக்கும் கடலில் ஜோர்டான் நதி கலக்கிறது. கடலாக இருந்தாலும் நல்ல தண்ணீரால் நிரம்பியிருக்கிறது அந்த கடல். தெளிந்த தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டு இருக்கும் மீன்கள், கடலைச் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் பசுமை, சுற்றிலும் மான், முயல்போன்ற மிருகங்களோடு, மனிதர்களும் சின்ன சின்ன குடில்கள் அமைத்து அங்கு தங்கி இருக்கிறார்கள். சூரியங்கூட அங்கு சுள்ளெனச் சுட்டெரிக்காமல் மென்மையாக மிளிர்கிறது. அந்தக் கடலில் கலக்கும் அதே ஜோர்டான் நதி இன்னொரு கிளை பிரிந்து தென்பகுதியில் இன்னொரு கடலில் கலக்கிறது.
இந்தக் கடலில் மீன்கள் இல்லை. முகர்ந்து பார்த்தாலே தண்ணீர் காந்துகிறது. ஒரு துளி பசுமை இல்லை. மிருகங்கள் இல்லை. ஒரு செல் உயிரிகூட அங்கு ஜீவிப்பதற்கான சூழல் இல்லை. மயானச் சூழல். முந்தையக் கடலில் கலக்கும் அதே நல்ல தண்ணீரைத்தான் இந்தக் கடலிலும் கலக்கிறது ஜோர்டான் நதி. ஆனாலும், ஏன் இந்த வித்தியாசம் ?
காரணம், முதல் கடல் தனக்குள் வந்து விழும் ஒவ்வொரு துளி நீருக்கு இணையாக மறு திசையில் நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது. உள்ளே விழுவதற்கு நிகராக நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்தக் கடலின் பெயர் கலீலி. அதே அந்த இரண்டாவது கடல் தனக்குள் விழும் நீரை அப்படியே சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு துளிகூடத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் மயான மிதவையாகக் காட்சி அளிக்கும் அந்தக் கடலின் பெயர் டெட் ஸீ... சாக்கடல் !
பாலஸ்தீனத்தில் இருக்கும் அந்த இரு வகைக் கடல் போல மனிதர்களிலும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். நீங்கள் அதில் எந்த வகை என்பதை உங்கள் டீன் ஏஜிலேயே முடிவு செய்துகொள்ளுங்கள் !
--- கி. கார்த்திகேயன் , ஆனந்தவிகடன், 23. 06. 2010.

No comments: