முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே சிலை வடிக்க அடிக்கல் நாட்டினார். 1990ல் சிலை அமைப்பது துவங்கினாலும், 1997ல் தான் சிலை அமைக்கும் பணி புத்துயிர் பெற்றது. ஆய்வுகள், நீர் பரிசோதனை, கற்களை பெயர்த்தெடுக்கும் பணி, சிற்ப வேலைகள் என மூன்று ஆண்டுகள் நீடித்தது. வள்ளூவர் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் கணபதி ஸ்தபதி. 1330 குறள்களை 133 அதிகாரங்களில் உள்ளடக்கிய உலகப் பொது மறை நூலென்பதால் 133 அடி உயர சிலை வடிவமைப்பது என முடிவானது. அதன்படி சிலையைத் தாங்கி நிற்கும் பீடம் 38 அடி உயரத்திலும், வள்ளூவர் சிலை 95 அடி உயரத்திலும் வடிவமைக்கப்பட்டது.
சிலையின் உயரம் கூட ஏனோதானோ கணக்கில் வடிவமைக்கப்படவில்லை. அதிலும் குறியீடாக ஒரு சிறப்பு உள்ளடங்கியிருக்கிறது. குறளை அறம், பொருள், இன்பம் என மூன்று பால்களாக பிரித்திருக்கிறார் வள்ளுவர். இதில் முதலாவதாக அறத்துப்பால். இதில் 38 அதிகாரங்கள் உள்ளன. பொருள் மற்றும் இன்பத்துப் பாலில் 95 அதிகாரங்கள் உள்ளன. அறத்தை அடிப்படையாகக் கொண்டே பொருளூம் இன்பமும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பீடம் அறமாக 38 அடி உயரத்திலும், பொருள், இன்பமாக 95 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. மொத்தமாக 7 ஆயிரம் டன் எடை கொண்ட கற்களின் உதவியோடு செதுக்கப்பட்ட சிலை, தமிழர்களின் சின்னமாக 2000 ம் ஆண்டு குமரிக்கடலில் நிறுவப்பட்டது. இது வள்ளுவர் சிலையின் வரலாறு.
--- தினமலர், 20. 06. 2010.
No comments:
Post a Comment