Friday, December 9, 2011

என்ன சத்தம் இந்த நேரம் ?

இரவுகளில் காடு எப்படி இருக்கும் ?
பூமியின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதமே காடுகள் இருக்கின்றன . இந்த ஆறு சதவிகித இடத்தில்தான் உலகின் பெரும்பாலான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன . இவை நள்ளிரவில் ' குட் நைட் ' சொல்லிப் படுத்துவிடும் என்று நினைத்தால், அது தவறு . பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் பேசிக்கொள்ளும் . பேசுவது என்றால் பக்கத்தில் இருக்கும் விலங்கிடம் ரகசியம் பேசுவது அல்ல . இருட்டில் இணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது . அதனால், ' செல்லம் எங்கேடா இருக்க ? ' என்ற கேள்வியை இரவு முழுக்க ஒலிபரப்பிக்கொண்டே இருக்கும் .
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒலி ஐந்து கி.மீ. தூரத்துக்கு கேட்கும் .
காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வௌவால்களின் தொண்டையே பரிணாம வளர்ச்சியால் மார்புவரை நீண்டுவிட்டது . அந்தளவுக்கு அந்த வௌவால்கள் பரம்பரை சவுண்ட் பார்ட்டிகளாக உள்ளன .
சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றின் இணைகள் தொலைதூரத்தில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க அவைகள் காடே அதிர்கிற மாதிரி கர்ஜிக்கும் . சிங்கம் கூப்பிட, பெண் சிங்கம் பதில் சொல்ல... நடுவில் எங்காவது நீங்கள் இருந்தால் குலை நடுங்கிவிடும்.
ஆப்பிரிக்க யானைகள் எழுப்பும் ஒலி, அடர்ந்த காடுகளைக் கிழித்துக்கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும் . தன் இனை நடந்து வருகிற அதிர்வைவைத்து, எவ்வளவு தூரத்தில் இணை உள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள் .
சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியைத் தட்டி காதலிகளுக்கு மெசேஜ் அனுப்பும் .
ஒரே நேரத்தில் இப்படி ஓராயிரம் ஒலிபரப்புகள் நடக்கும்போது, அமைதியான உயிரினங்கள் எப்படி தகவல் அனுப்பமுடியும் ? ஒரு சில விலங்குகள் தங்கள் உடலின் வாசனையையே தூது அனுப்பும் . புனுகுப் பூனை, கஸ்தூரி மான் துவங்கி பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்துத்தான் வம்சத்தை வளர்க்கின்றன . சிப்பாய் எறும்புகள் என்று சொல்லப்படும் கண் பார்வை இல்லாத எறும்புகள் நூல் பிடித்த மாதிரி ஒன்றையொன்று பின்பற்றி, வரிசையாகச் செல்லும் . வழிநடத்துவது வாசனைதான் . இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கியப் பங்கு தவளைகளுக்கு உண்டு . தவளைகளின் குரலைவைத்தே அந்தத் தவளையின் வயது, அளவு எல்லாவற்றையும் இணை தவளைகள் கண்டுபிடித்துவிடும் . பிடித்திருந்தால் விரும்பிப்போகும் . இல்லையென்றால் விலகிப்போகும் !
--- பி.ஆரோக்கியவேல் . காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 .

No comments: