Sunday, November 23, 2008

காந்தியின் அரண்மனை !

இன்று குண்டுவெடிப்புக்களால் குதறப்பட்டுக்கிடக்கும் அதே அகமதாபாத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதிய அந்த எளிய மனிதர் வசித்த அரண்மனை இருக்கிறது.
சலசலத்துச் செல்லும் சபர்மதி நதிக்கரையோரம், பல சரித்திர நினைவுகளைத் தன்னுள்ளே பதித்து, மிக எளிய குடில்களுடன் அசோக மரங்கள் தலையாட்டி அழைக்கின்றன.காந்தியின் சத்திய சேதிகளை எடுத்துச் செல்வது போல் அணில்கள் ஓடுகின்றன.கிலிகள், குருவிகள், மைனாக்கள், புறாக்கள் என்று பறவைகள் சந்தோஷமாக திரிகின்றன.
முதலில் கவர்வது காந்தியைப்பற்றி பற்றிய கண்காட்சி புகைபடங்கள், ஓவியங்கள்,மகாத்மா கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் எல்லாம் தேசத்தின் கறைபடாத நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
அடுத்து மகாத்மாவும், அன்னை கஸ்தூரிபாவும் வாழ்ந்த ஹிருதயகுஞ் குடில்.ஆசிரமத்துக்கே இதயமாக விளங்கிய குடில் என்பதால், இதற்கு இந்தப் பெயர்.
வாயிலில் ஒரு முதியவர் கை ராட்டினத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருக்கிறார்.
குடிலில் நுழைந்தவுடன் அதன் எளிமை தாக்குகிறது. காந்தியின் அறை பட்சிகளின் இன்னிசைக்கிடையே மோனத்தவம் புரிகிறது. மெல்லிய மெத்தை, திண்டு, குட்டையான எழுது மேஜை, ராட்டை, ஊன்றுகோல்,
தேசியத் தலைவர்கள், வெளினாட்டுத் தலைவர்கள் காந்தியை இங்கே வந்துதான் சந்தித்தார்கள். இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் இங்கேதான் கருத்தரித்தன காந்தியின் அறையை ஒட்டி, அன்னை கஸ்தூரிபாவின் அறை.இரு ஜன்னல்களைத் தவிர வேரு எதுவும் இல்லை.ஒரு திறந்தவெளி முற்றம்.சமையல் சதுரம்.
அடுத்து, காந்தியால் கவரப்பட்ட வினோபா பாவே வாழ்ந்த 'மீரா' குடில், அதையடுத்து இருப்பது, ராஜேந்திர பிரசாத், நேரு, ராஜாஜி, கான் அப்துல் கபார்கான் போன்ற பெரும் தலைவர்கள் வாழ்ந்த 'நந்தினி'எளிமையான குடில்.
சபர்மதி நதிக்கரை ஓரம் திறந்தவெளி , பிரார்த்தனை பூமி. காந்தி வாழ்ந்த பூமியைத் தொட்டுத் தழுவிச் செல்கிற பெருனையோடு, சபர்மதி நதி ஆசிரமத்தின் அஸ்திவாரத்தை ஈரம் பண்ணிக்கொண்டு ஓடுகிறது. .
--ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

No comments: