Thursday, November 17, 2011

எச்சில் துப்பும் பழக்கம் !


ஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . அது இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் ( Digestion ) துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ptyalin என்கிற ' என்ஸைம் ' எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது . முத்தங்களை மென்மையாக்குவது எச்சில்தான் !
இருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு . பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணிஸ்ட்டோர் இதைக் கச்சிதமாக ( தர்மசங்கடமாக ! ) விளக்குகிறார் . ' வாய்க்குள் இருக்கும் எச்சிலை விழுங்குங்கள் . இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள் . சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள் . பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து... இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா ? மாட்டீர்கள் ! வாயில் இருந்து வெளியே வந்த மறு விநாடி எச்சில் தன் குடியுரிமையை ( Renounced its citizenship ! ) ' இழந்துவிடுகிறது .
இந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 -ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் ( Spittoons ) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ' மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ! ' என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன . இப்படி கண்ட இடத்தில் துப்புகிற ' கலாசாரத்தை' ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, ' அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில் ! ' என்றார் . இப்போது, அங்கே யாரும் பொது இடத்தில் துப்புவது இல்லை .
--- ஹாய் மதன் . ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

No comments: