Thursday, February 26, 2015

'கிராண்ட்கேன்யன்'


தேசியப்  பூங்காவாக  அறிவிக்கப்பட்டது!  1919  பிப்ரவரி  26.
     (  சிறப்பு ).
     உலகில்  நூற்றுக்  கணக்கான  பள்ளத்தாக்குகள்  இருக்கின்றன.   எனினும்,  அமெரிக்காவின்  அரிசோனா  மாகாணத்தில்  உள்ள  'கிராண்ட்கேன்யன்'  எனும்  மாபெரும்  பள்ளத்தாக்கு  உலகப்  புகழ்பெற்றது.  ஒவ்வொரு  ஆண்டும்  50  லட்சம்  சுற்றுலாப்  பயணிகள்  கண்டுகளிக்கும்  இயற்கைப்  பிரதேசம்.  இது,  277  மைல்  நீளம்,  அதிகப்பட்சமாக  18  மைல்  அகலம்  கொண்ட  இந்தப்  பள்ளத்தாக்கின்  ஆழம்  6,000  அடி.  கண்ணுக்கு  எட்டிய  தூரம்  வரை  பளிச்சென்ற  வண்ணத்தில்  நிற்கும்  பிரமாண்டமான  பாறைகள்,  அவற்றுக்கிடையே  வெண்பஞ்சு  போல்  மிதக்கும்  மேகங்கள்  என்று  பரவசம்  தரும்  பள்ளத்தாக்கு  இது.  1,500 -க்கும்  மேற்பட்ட  வகை  தாவரங்கள்,  மலை  சிங்கம்,  அபூர்வ  வகை  தவளைகள்,  கழுகுகள்  என்று  பல்லுயிரிகளின்  இருப்பிடமாக  இது  இருக்கிறது. 1.7  கோடி  ஆண்டுகளுக்கு  முன்னர்  கொலராடோ  ஆற்றின்  ஆர்பரிக்கும்  நீரோட்டம்  இந்தப்  பகுதியில்  ஏற்படுத்திய  அரிப்பின்  விளைவாக  உருவானது  இந்த  கிராண்ட்கேன்யன்!
     பல  நூற்றாண்டுகளாகச்  செவ்விந்தியப்  பழங்குடிகளின்  இருப்பிடமாக  இருந்த  பிரதேசம்  இது.  பியூப்லோ  இனத்தைச்  சேர்ந்தவர்கள்,  இந்தப்  பள்ளத்தாக்கைப்  புனித  ஸ்தலமாகக்  கருதினார்கள்.  இந்த  இடத்திற்கு  புனிதப்  பயணம்  மேற்கொண்டார்கள்.  1540-ல்  ஸ்பெயினைச்  சேர்ந்த  கார்சியா  லோபெஸ்  டி  கார்டெனாஸ்  என்ற  பயணி  இந்தப்  பள்ளத்தாக்கைக்  கண்டறிந்த  பின்னர்தான்  இந்தப்  பிரதேசம்பற்றி  வெளியுலகத்துக்குத்  தெரியவந்தது.
     300  ஆண்டுகளுக்குப்  பின்னர்,  அமெரிக்காவைச்  சேர்ந்த  மண்ணியல்  ஆய்வாளர்  வெஸ்லி  பாவல்,  இந்தப்  பகுதிக்குப்  பயணம்  செய்த  பின்னர் 'கிராண்ட்கேன்யன்'  என்ற  பெயரைப்  பிரபலப்படுத்தினார்.
     1919  பிப்ரவரி  26-ல்  அப்போதைய  அதிபர்  உட்ரோ  வில்சன்,  இந்தப்  பகுதியை  தேசியப்  பூங்காவாக  அறிவித்தார்.
-- சரித்திரன்.   ( கருத்துப்  பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  பிப்ரவரி  26, 2015.
    (  பின் குறிப்பு :  நாங்கள்  குடும்பத்துடன்  கடந்த  2008 ஆம்  ஆண்டு  ஆகஸ்ட்  மாதம்  16 மற்றும்  17 -ல் 'கிராண்ட்கேன்யன்'
பிரதேசத்தைக்  கண்டு  களித்தோம்  என்பதை  மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறேன். )                         

No comments: