Thursday, July 7, 2016

மலட்டுத் தன்மை

சோப்பு, பற்பசை, சன்ஸ்கிரீன் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.
* ஆய்வில் அதிர்ச்சித் தகவல் *
     96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், வெயிலிலிருந்து சருமங்களைப் பாதுகாப்பதற்காக சன்ஸ்கிரீன் கிரீம்களில் பயன்படுத்தப்படும் '4- மீதைல்பென்ஸில்டேன் கேம்பர்' ( 4-எம்பிசி ), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான 'டிரைகுளோசன்' ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிக்கின்றன.
     இதற்கு முந்தைய ஆய்வுகளில், இந்த ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு ஆய்வுமுறைகள் இல்லை.  தற்போது புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
     நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  மனிதனின் அன்றாடம் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருட்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் 'நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை' எனக் கருதப்படும் ரசாயனங்கள் உள்ளன.
     சிலவகை சோப்புகள், பற்பசைகள், சன்ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் சிலவகை ரசாயனங்கள், விந்தணுக்களின் கால்சியம் அளவை அதிகப்படுத்துகின்றன.  அவற்ரின் நீந்தும் தனமையில் மாற்றத்தை ஏற்படுதுவதுடன், கருமுட்டையைப் பாதுகாக்கும் கவசத்தைத் துளைத்து உள் நுழையும் திறனையும் குறைக்கின்றன.
-- ஏ.எப்.பி.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மே 14.  2014.   

Wednesday, July 6, 2016

மருத்துவர்கள் ரொமான்ஸ்.

  மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக்கொண்டே யோசித்திருப்பார்கள்போல !  மருத்துவர்களை மனிதக் கடவுளாக நாம் போற்றிக்கொண்டிருக்க, 'நோயாளிகள் விருப்பப்பட்டால் மருத்துவர்கள் அவர்களுடன் ரொமான்ஸில் ஈடுபடலாம்' என்று அதிர்ச்சி அனுமதி அளித்திருக்கிறது பிரிட்டன் மருத்துவ கவுன்சில்.  மருத்துவர்கள் நோயாளிகளோடு ரொமான்ஸில் ஈடுபடலாம்.  விருப்பம் இருதால் காதலிக்கலாம் என்று அறிவித்திருக்கும் மருத்துவ கவுன்சில்,  அதற்கெனச் சில விதிமுறைகளையும் விதித்திருக்கிறது.  அதன்படி டாக்டர்கள் தான் சிகிச்சை அளித்த முன்னாள் நோயாளிகளுடன் மட்டுமே காதல்வயப்படாலாமாம்.  காதல் புரியும் நோக்குடன் நோயாளியின் வீட்டுக்கு அடிக்கடி செல்லக் கூடாதாம்.  ஆதரவும் எதிர்ப்புமாக சலசலதுக் கிடக்கிறது மருத்துவ வட்டாரம்.  -  இதெல்லாம் நல்லதுக்கில்லை!
-- இன்பாக்ஸ்
-- ஆனந்த விகடன். 10-04-2013.

Tuesday, July 5, 2016

கொலஸ்ட்ரால் .

கொலஸ்ட்ரால் தொடர்ச்சி...
     சமீபத்தில் சி.என்.என். வெளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான டாக்டர் செண்டிரா சொல்லும் உண்மைகள் கொஞ்சம் அதிரவைக்கின்றன...
     உலகில் தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் கொலஸ்ட்ரால் குறைக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன.  இதனை உட்கொள்வதால் இளமையிலேயே கால் வலி, நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படுகின்றது.  சிலருக்குப் பயனளிப்பதுகூட , அது கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் அல்ல.  அதன் anti- inflammatory செய்கையால்தான் என்கிறார் அவர்.  ஒரு புண்ணை ஆற்ற, நோயில் இருந்து நம்மைக் காக்க நடக்க வேண்டிய inflammation, காரணம் இல்லாமல் நடக்கும்போதுதான் மரடைப்பு முதல் கேன்சர் வரை வருகிறது என்பதுதான் தற்போதைய மருத்துவ விளக்கம்.  நாம் தவிர்க்க வேண்டியது எண்ணெயை அல்ல... டென்ஷனையும் சோம்பேறித்தனத்தையும் மட்டும்தான்.
     மன இறுக்கமும் பரபரப்பும் அடிக்கடி நிகழும்போது இந்தத் தேவையற்ற  inflammation நிகழும்.  ஆகவே, மொத்தக் குற்றத்தையும் கொலஸ்ட்ரால்தலையில் சுமத்துவது சரியல்ல.
     இந்தியாவிலும் இப்போது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்தைப் பேசத் துவங்கியுள்ளனர்.  டாக்டர் செண்டிரா கூடுதலாகச் சொன்ன கருத்து, 'தேங்காய் எண்ணெய் இதயத்துக்கு நல்லது' என்பது.  'அதில் உள்ள சாக்சுரேட்டட் கொழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது' என்கிறார் அவர்.  இயற்கை தரும் கொழுப்பில் அதிகப் பிரச்னை  எப்போதும் கிடையாது.  மனிதன் உருவாக்கும் வனஸ்பதி, மார்ஜரைன் ( பீட்சா, பர்கர், டோனட் , பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பேக்கரி ரொட்டி அயிட்டங்களில் சேர்க்கப்படுவது) முதலான எண்ணெயில்தான் trans fat எனும் மிகக் கெட்ட கொழுப்பு அதிகம்.  அதை தவிர்த்தே ஆக வேண்டும்.
-- மருத்துவர் கு. சிவராமன்.  (  'ஆறாம் திணை ' , தொடரில் ..).
-- ஆனந்த விகடன். 10-04-2013. 

Monday, July 4, 2016

கொலஸ்ட்ரால்

  கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும்.  உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து.  அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்.  காரணம், மாரடைப்பு நிகழும் 50 சதவிகித மக்களில் அதிக ரத்தக் கொழுப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவ விஞ்ஞானம், 'கொலஸ்ட்ரால்தான் காரணம்' என கட்டப்பஞ்சாயத்து பண்ணிவிட்டது.  ஆனால், மீதி 50 சதவிகிததினருக்கு கொஞ்சுண்டு கொலஸ்ட்ரால் இருந்ததைக் கவனிக்க மறந்தனரா அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.  இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னர், இந்த கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்தில் 30 பில்ல்யன் டாலர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
     உடலில் கொலஸ்ட்ராலின் கால் பங்கு மூளையில் இருக்கிறது.  நரம்பு உறையிலும் myelin -லும் இன்னும் ஒவ்வொரு செல் உறையிலும் கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமான பொருள்.  அன்றாடம் இயல்பாக ரத்தக் குழாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வெடிப்பைப் பட்டி பார்த்து பதமாகவைத்திருக்கும் முக்கிய வேலை கொலஸ்ட்ரால் செய்கிறது.  'இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை மருந்து கொடுத்து மட்டுப்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனம்?' என்கிறார் அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் செண்டிரா.
-- மருத்துவர் கு. சிவராமன்.  (  'ஆறாம் திணை ' , தொடரில் ..).
-- ஆனந்த விகடன். 10-04-2013.     

Sunday, July 3, 2016

உலகின் காஸ்ட்லி வீடு

உலகின் காஸ்ட்லி வீடு பட்டியல்.
     ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை வீடு உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வீடாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
     அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் விலை உயர்ந்த வீடுகள் குறித்து பட்டியலிட்டுள்ளது.  அதில் தெரியவந்துள்ளதாவது : பல அடுக்கு மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானியின் மும்பை வீடான அண்டிலியா உலகில் உயர்ந்த வீடாக முதலிடத்தை பிடித்துள்ளது.
     இந்த வீடு 4 லட்சம் சதுர அடியில், 27 மாடிகள், 9 லிப்ட், 1 திரை அரங்கு, 1 ஜிம், 168 கார் பார்க்கிங், நூற்றுக்கணக்கான அறைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.  கீழ்தளத்தில் உள்ள 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காக உள்ளது.  3 ஹெலிகாப்டர்கள் தரை இறங்கும் வசதியும் இந்த வீட்டில் உள்ளது.  இந்த வீட்டை நிர்வகிக்க மட்டும் குறைந்தபட்சம் 600 பேர் வேலைக்கு தேவையாம்.  இந்த வீடு கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் ( ரூ.12 ஆயிரம் கோடி ) அளவில் கட்டப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-- தினமலர். வியாழன், மே 15, 2014.  

Saturday, July 2, 2016

திருவள்ளுவர் தினம்!

  வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் தினம் !
வரலாற்று ஆதாரங்களுடன் அறிஞர்கள் புதுத் தகவல்.
பெரியார், அண்ணாதுரை வழியை பின்பற்ற கோரிக்கை.
     'வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்'  -  இந்த தலைப்புக்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா.பொ.ரத்தினம் எம் ஏ, பி.ஓ.எல்.  23.11. 1952ல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகம் சார்பில் அரும்பாடுபட்டு வைகாசி அனுட ( அனுஷ ) நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டி அதில் வெற்றியும் பெற்றார்.
     சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.  இந்த கோயிலில், திருவள்ளுவர் அவதார நாளாக  வைகாசி அனுடமும் - அவர் அடைந்து போன நாளாக மாசி உத்தரமும் கடைபிடிக்கப்படுகின்றன.
-- தினமலர். வியாழன், மே 15, 2014.    

Friday, July 1, 2016

மூளைகாரன்பேட்டை

நான் யார் ?
1. எட்டு எழுத்துகள் கொண்ட நான் ஒரு ராகம்.  என் பெயரில் திரப்படம்  ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
2.  எனது 1,2,3,8 எழுத்துகளை இணைத்தால், தமிழ் வளர்த்த அமைப்பு.
3.  எனது 4,3,8 எழுத்துகளை இணைத்தால், கல்யாணி, தோடி, காம்போதி  போன்ற வகை.
4.  எனது 3,5,8 எழுத்துகளை இணைத்தால், அது நெஞ்சில்  கட்டிக்கொள்ளும் சளியைக் குறிக்கும்.
5.  எனது கடைசி மூன்று எழுத்துகள் காயத்தைக் குறிக்கும்.
6.  எனது 5,7,8 எழுத்துகள் காசு என்பதைக் குறிக்கும்.
7.  எனது 3,6,8 எழுத்துகளை இணைத்தால்,கையைக் குறிக்கும்.
8.  எனது 3,7,8 எழுத்துகளை இணைத்தால்,கிடைப்பது மிகச் சிறிய   அளவிலான நேரம்.
9.  என் முதல் நான்கு எழுத்துகள் சிவபெருமானை அழைப்பதாகும்.
     நான் யார் தெரியுமா?
    விடை : 1.சங்கராபரணம்.  2.சங்கம்.  3.ராகம்.  4.கபம்.  5.ரணம்.
                 6.பணம்.  7. கரம்.  8.கணம்.  9.சங்கரா.
 -- ஜி.எஸ்.எஸ்.  ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ்.ஞாயிறு, மே 11, 2014.