Wednesday, June 3, 2009

சிவ பக்தன் !

மகாலிங்க சுவாமிக்கு தைல அபிஷேகம் செய்ய ஒருவன் எள்ளைக் காய வைத்திருந்தான் . அதை ஒருவன் திருடி எடுத்து வாயில் போட்டுத் தின்று விட்டான் .
உடனே , எள்ளிற்குச் சொந்தக்காரன் சிவ கைங்கர்யத்திற்கு வைத்திருந்ததை எதுத்து விட்டதாக கூறி , எள் தின்றவனை அழைத்துப் போய் அரசர் முன்னிலையில் நிறுத்தி முறையிட்டான் .
வரகுண் பாண்டியர் அந்த எள் திருடனை நோக்கி , " எள்ளை எடுத்துத் தின்றது உண்மைதானா ? " என்று விசாரித்தார் .
திருடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான் . மீண்டும் அரசர் , " அந்த எள் சிவபெருமானின் தைல அபிஷேகத்திற்க்காக காய வைத்திருந்தது என்ற விஷயம் உனக்குத் தெரியுமா ? " என்றார் .
திருடன் , " ஆம் , தெரியும் " என்று பதில் கூறினான் .
அதைக் கேட்டதும் அரசர் கோபத்துடன் , " சிவ அபசாரம் செய்து விட்ட உன்னை இப்போதே இந்த வாளால் வெட்டி விடுகிறேன் " என்று சொல்லி உடனே வாளை உருவினார் .
திருடன் , " அரசே ! நான் சொல்வதைத் தயை செய்து கேளுங்கள் . எள்ளைத் தின்றால் உழைக்கவேண்டும் . மகாலிங்க சுவாமியினுடைய எள்ளைத் தின்றால் மீண்டும் பிறந்து அவருக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தை அடைவேன் . அதனால்தான் அவருடைய எள்ளைத் தின்றேன் ."
இதைக் கேட்ட அரசர் , " இவன் சிவபக்தன் , சிவத் தொண்டு செய்வதற்காகவே ஏள்ளை எடுத்துத் தின்றிருக்கிறான் , " என்று அவனது செயலை எண்ணி வியந்து , திருடனின் வாயைத் திறக்கச் சொல்லி அவனது வாயில் ஒட்டியிருந்த இரண்டொரு எள்ளையும் தாம் எடுத்துத் தின்றார் .
--- ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் . 04 - 12 - 1983 .

No comments: