Saturday, June 27, 2009

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோயிலில் நுழையும் போதே ஒரு பிரம்மாண்டமான இடத்தில் நுழையும் பிரமிப்பு ஏற்படும் . 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது ராமேஸ்வரம் . கோயில் உயர்ந்த மதிற்சுவர்களும் , அண்ணாந்து பார்க்கக்கூடிய கோபுரங்களும் , பிரம்மாண்டமான நந்தியும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் என்றாலும் , ஆயிரங்கால் மண்டபம் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் .
நூல் பிடித்தாற் போன்ற துல்லியத்தை அத்தனை மண்டபத் தூண்களில் எப்படி கொண்டு வந்தனர் என்பது புரியாத புதிர் . அந்தக் காலத்தில் கட்டடக் கலை எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கு சாட்சியாய் நிற்கிறது அந்த மண்டபம் . 4 ஆயிரம் அடி நீளமுள்ள உலகிலேயே மிக நீண்ட மண்டபமான இதில் மொத்தம் 4 ஆயிரம் தூண்கள் தமிழரின் சாதனையாய் கம்பீரமாய் நிற்கின்றன .
இந்த தூண்கள் கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன . ராமேஸ்வரம் சுற்று வட்டாரப் பகுதி எங்கும் இந்தக் கற்கள் கிடைப்பதில்லை . எனவே , தமிழ்நாடு அல்லாது வெளிநாடுகளில் இருந்துதான் கடல் வழியாக அவை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் . கிழக்குப் பகுதி ராஜ கோபுரம் 126 அடி உயரமும் , எட்டு நிலைகளையும் கொண்டது . 18 அடி உயர நந்தி 22 அடி நீளம் கொண்டது . 12 -ம் நூற்றாண்டு வரை இந்தப் புனிதத்தலம் பெரிய கோயில்களோ , கட்டடங்களோ இன்றி சிறிய கூரைப் பகுதியில்தான் இருந்ததாம் . முதலில் இங்கே கோயில் கட்டடத்தை எழுப்பியது இலங்கை அரசன் பராக்கிரம பாஹூ . அதன் பிறகு ராமேஸ்வரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் கோயில் கட்டடத் திருப்பணிகளை முடித்து வைத்தனர் . கோயிலின் பல விமானப் பகுதிகள் பல்லவர் கால ஸ்டையிலை நினைவுப்படுத்துவதாக இருக்கின்றன . அடுத்தடுத்து வந்த பல மன்னர்களும் கோயில் புணரமைப்பு மற்றும் கட்டுமானங்களை ஏற்படுத்தினர் .மூன்றாவது பிரகாரத்தில் மிக நீண்ட மண்டபம் 18 -ம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர் . திருவாங்கூர் , ராமநாதபுரம் , மைசூர் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானங்கள் கோயிலுக்கான பராமரிப்பு நிதியை வழங்கியிருக்கின்றன .
--- ஆர் . சண்முகம் , ராணிப்பேட்டை . தினமலர் . சிறுவர்மலர் . பிப்ரவரி . 2009 .

No comments: