விண்வெளி சகாப்தத்தில் சாதனை படைத்த முதல் பெண்ணான வாலன்டினா தெரஸ்கோவா 1937 -ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி , ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் .
இவரது முழு பெயர் வாலன்டினா விளாடிமிரோவ்னா தெரஸ்கோவா . அப்பாவுக்கு வயல்களில் டிராக்டர் ஓட்டும் வேலை . அம்மாவுக்கு நெசவு ஆலையில் வேலை . குடும்ப வறுமையால் , தனது 8 வது வயதில்தான் அவரால் பள்ளிக்கு சேர முடிந்தது . ஆனாலும் , தொடர்ந்து படிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் , 1953ல் அவர் பள்ளிக்கு டாட்டா காட்டி விட்டு தொலைதூரக் கல்வி முறையில் தனது படிப்பைத் தொடர்ந்தார் . இதில் அவர் படித்தாலும் , பாராசூட் ஜம்பிங்கில் அலாதி பிரியம் .இதற்காக உள்ளூரில் இருந்த விமானப் பயிற்சி கிளப் ஒன்றில் சேர்ந்து பாராசூட் ஜம்ப் பயிற்சி பெற ஆரம்பித்தார் . வாலன்டினாவின் பாராசூட் ஜம்பிங் பற்றி கேள்விப்பட்ட ரஷ்ய அரசு , அவரை விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்வு செய்தது . விண்வெளியைச் சுற்றிவந்த முதல் ரஷ்ய வீரரான யூரி காகரினுக்கு அடுத்தபடியாக , சோவியத் ராக்கெட் இன்ஜினியரான செர்கே கொரோல்யாவ் தலைமையிலான விண்வெளி குழுவில் இடம் பிடித்தார் வாலன்டினா . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1962 பிப்ரவரி 16ம் தேதி வெளியானது . ரஷ்யா -- அமெரிக்கா இடையிலான விண்வெளி யுத்தத்தில் , முதன்முறையாக ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி , அதிலும் தனது முத்திரை பதிப்பதில் முந்தியது ரஷ்யா . மிக் போர் விமானம் , இலகு ரக விமானம் , ராக்கெட் இன்ஜினில் பயிற்சி என்று பல பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த வாலன்டினா , 1963 ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி வோஸ்டாக் ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணுக்குப் பறந்தார் . விண்வெளியில் 3 நாட்கள் தங்கியிருந்த அவர் , 48 முறை உலகை வலம் வந்தார் .
--- தினமலர் . 06 - 03 - 2009 .
No comments:
Post a Comment