Thursday, June 11, 2009

ஆம் காலம் ஆகும் !

மலையத்துவஜ பாண்டியனின் மகள் மீனாட்சி , தகப்பனார் மறைந்த பிறகு , தான் அரச காரியங்களைக் கவனிக்கிறாள் .அவள் திருமண ஞாபகமே இல்லாமல் , அரச காரியங்களிலேயே ஈடுபட்டிருந்ததைக் கண்டு , அவளுடைய தாயார் காஞ்சனமாலை கவலையுறுகிறாள் . ஆனால் , மீனாட்சியோ அம்மாளைத் தேற்றுகிறாள் . " அம்மா ! ஆம் காலத்தில் எல்லாம் ஆகும் . வீணாகக் கவலைப்படாதே !" என்கிறாள் .
ஆம் காலத்தில் ஆகும் என்றால் , எது எது எந்தக் காலத்தில் ஆகவேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ , அந்தக் காலத்தில் ஆகும் என்பது பொருள் . அதனால் , ஆண்டவனே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவான் , நாம் கைகளைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருக்கலாம் என்பது பொருள் அல்ல .
ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் முயற்சி தேவையா, அல்லது திருவருள் இருந்தால் மட்டும் போதுமா என்கிற பிரச்சினை வெகு காலமாகவே மக்களைக் குழப்பி வருகிறது . இதற்குப் பதில் , முயற்சியும் வேண்டும் , திருவருளும் வேண்டும் என்பதுதான் . நிலத்தில் பயிர் விளைய, எப்படி நாம் உழவும் வேண்டும் , மழை பொழியவும் வேண்டுமோ , அதுமாதிரி இரண்டும் தேவை . ஆண்டவன் நமக்காக உழமாட்டான் , நாம்தான் உழ வேண்டும் . மழையை நம்மால் கொண்டு வர முடியாது , அவன் தான் கொடுக்க வேண்டும் .
ஆம் காலத்தின்போது ஆகும் என்று சொன்ன மீனாட்சிகூட , கணவன் தன்னைத் தேடிக் கொண்டு வருவான் என்று காத்திருக்கவில்லை . அவள் திக் விஜயம் செய்கிறாள் . பலரை வெற்றி கொள்ளுகிறாள் . கடைசியில் அவள் சிவனைச் சந்தித்ததும் , அவளுடைய மூன்றாவது பால் உறுப்பு மறைய , அவன்தான் தன் கணவன் எனத் தேர்கிறாள் . அவள் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் , அதாவது திக் விஜயம் கிளம்பாமல் இருந்திருந்தால் சிவனைச் சந்தித்து இருக்க முடியுமா?
--புலவர் சிதம்பரம் சுவாமிநாதன் .கடம்பத்தூர் சைவ சித்தாந்தக் கழகத்தில் , நிகழ்த்திய , " தெய்வத் திருமணங்கள் " சொற்பொழிவின் போது . வியா , நவ ,16 , 1989 .

No comments: