Friday, June 26, 2009

கிரகாம் பெல் .

அலெக்சாண்டர் கிரகாம் பெல் .
அலெக்சாண்டர் கிரகாம் பெல் , ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்தார் . அவரது தந்தை மெல்வில் பெல் பேச்சுக்கலைப் பயிற்சியில் சிறந்து விளங்கினார் . ஒலி உண்டாவதற்குக் காரணமான குரல்வளை , நாக்கு , தொண்டை , உதடுகள் ஆகியவற்றின் பங்கு பற்றி விளக்கும் ஒலிப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப் பள்ளியில் கிரகாம் பெல் தனது படிப்பைத் தொடர்ந்தார் . பேச்சுப்போட்டி , நாடகம் , இசை ஆகியவற்றிலும் பெரும் ஈடுபாடு இருந்தது . பள்ளியில் படிக்கும்போதே மற்றவர்களுக்கு பேச்சுப் பயிற்சி அளித்தல் , இசை கற்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார் .
1865-ம் ஆண்டு மின்சாரத்தின் வழியே பேசும் ஒலியை செலுத்தும் எண்ணம் அவருக்குத் தோன்றியது . ஹெர்மன் ஹேய்ம் ஹோல்ட்ஸ் என்பவர் எழுதிய ' வியப்பூட்டும் குரலொலி ' என்ற புத்தகத்தை படித்ததால் அவருக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது.
1866-ம் ஆண்டு முதல் பல ஆய்வுகளில் கிரகாம் பெல் ஈடுபட்டார் . 1870 -ல் அவரது அண்ணன் காசநோய்க்கு பலியானார் . எனவே , அந்த நோய் கிரகாம் பெல்லையும் தாக்கக்கூடும் என்பதால் அவர் தந்தை குடும்பத்தை கனடா நாட்டிலுள்ள ஒண்டோரியோவுக்கு அருகில் பிராண்ட் போர்ட் எனும் இடத்திற்கு மாற்றினார் . கிரகாம் பெல் பாஸ்டன் நகருக்குச் சென்றார் . 1872 -ம் ஆண்டில் அங்கு காது கேளாதோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளி ஒன்றைத் துவக்கினார் .
1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் குரல் உறுப்புகள் பற்றிய பேராசிரியராகப் பணியாற்றினார் .
தொலைபேசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரே , தாமஸ் ஆல்வா எடிசன் , கிரகாம் பெல் , ஜெர்மனியின் பிலிப் ஆகிய 4 பேரும் தனித்தனியே முயற்சித்தனர் . இறுதியில் கிரகாம் பெல் வெற்றி பெற்றார் . 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அரசு கிரகாம் பெல் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டு தொலைபேசிக்கான காப்புரிமையை வழங்கியது .
1876 ஜூன் மாதம் அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரில் அறிஞர்கள் முன்னிலையில் தொலைபேசி எவ்வாறு பணி புரிகிறது என்பதை விளக்கினார் .
1877-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ' பெல் தொலைபேசி நிறுவனம் ' உருவாக்கப்பட்டது .கிரகாம் பெல் தனது கண்டுபிடிப்பால் முப்பதாவது வயதில் பெரும் புகழுக்கும் , செல்வத்திற்கும் சொந்தக்காரர் ஆனார் . தொலைபேசியை கண்டுபிடித்த பிறகு கிரகாம் பெல் 45 ஆண்டுகள் தனது அறிவியல் வாழ்க்கையை மேற்கொண்டார் .
1922-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி அவர் இறந்தபோது அமெரிக்காவில் எல்லா தொலைபேசிகளும் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டு அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது .
--- தினமலர் . 07 -03 -2009 .

No comments: