Thursday, June 18, 2009

தவளை .

சிகரம் தொட்ட தவளை .
தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன . மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை எட்டவேண்டும் என்பதுதான் போட்டி .
இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும் , போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் கோபுரத்தை சுற்றி மிகப்பெரிய கூட்டம் கூடியது .
போட்டி தொடங்கியது . சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏறமுடியாமல் சரிய ஆரம்பித்தன . சாண் ஏறினால் முழம் சறுக்கியது . தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த சில தவளைகள் மட்டும் அதிக உயரத்தில் ஏறிக்கொண்டு இருந்தன .
' இது மிகவும் கஷ்டமான காரியம் ' என கூச்சல் போட்டது கூடியிருந்த கூட்டம் . உற்சாகமாக இருந்த சில தவளைகள் சோர்வடைந்து தங்கள் முயற்சியை கைவிட்டு கீழ்நோக்கி இறங்கத் தொடங்கின.
ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்துத் தவளைகளும் முயற்சியைக் கைவிட்டன . அது மட்டும் தொடர்ந்து மேலே ஏறிக்கொண்டே இருந்தது . தன் முயற்சியிலிருந்து சற்றும் தளரவில்லை . மிகுந்த சிரமப்பட்டு கோபுரத்தின் உச்சியை அடைந்தது .
' உனக்கு மட்டும் எப்படி இத்தனை பலம் ?' என தொல்வியடைந்த தவளைகள் கேட்க , வெற்றி பெற்ற தவளையிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை . பிறகுதான் தெரிந்தது வெற்றிபெற்ற தவளைக்கு காதுக் கேட்காது என்பது .
மனிதன் தனது லட்சியத்தை அடைய இந்தச் செவிட்டு தவளை போன்றுதான் மற்றவர்களின் அர்த்தமற்ற -- நியாயமற்ற விமர்சனங்களைக் காதில் வாங்காமல் இருக்கவேண்டும் .
--- விவேகானந்தர் சொன்ன கதை . ராணி . 23 - 11 - 2008 . இதழை கொடுத்து உதவியது , எனது அண்ணன் மகன் , A .முத்துக்குமரசாமி . திருநள்ளாறு .

No comments: