Saturday, October 2, 2010

தமிழை அப்படி வளர்த்தார் !

உ. வே. சாமிநாதய்யர் போன்ற மாமேதைகளுக்கு ஆசிரியராக இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கவிதை பாடும் வேகத்தில் தனியானதோர் ஆற்றலைப் பெற்றிருந்தார் . ' நாகைபுராணம் ' என்பதை ஒரு நாளைக்கு 200 செய்யுட்கள் வீதம் இயற்றினார் . அந்தக் காலத்தில் அவர் பெற்றிருந்த செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம் .லண்டனிலிருந்து அவருக்கு கடிதம் எழுதிய ஒருவர் ' மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்தியா ' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார் . அந்தக் கடிதம் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டது .
இப்படிப்பட்ட பேரறிஞர், தமிழை முற்றிலும் கற்பதற்காக ஒரு பிச்சைக்காரப் பரதேசியுடன் நாள் முழுக்க, வாரக் கணக்கில் சுற்றினார் என்பதை அறியும்போது, நமக்கு உடம்பு என்னவோ செய்யும் ! எல்லாவற்றையும் திறம்படக் கற்ற அவர், அணியிலக்கணத்தைச் சரியாக கற்க விரும்பினார் . முறையாக அவருக்குப் பாடம் சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை . திருச்சியில் ஒரு பரதேசிக்கு அணியிலக்கணம் நன்றாகத் தெரியும் என்று கேள்விப்பட்ட அவர், நேராக அந்தப் பரதேசியிடம் சென்றுவிட்டார் .
பரதேசி பல நாட்கள் அவர் பக்கமே திரும்பவில்லை . வீடு வீடாகப் பிச்சை கேட்க அந்தப் பரதேசி போகும்போது , பிள்ளை அவர்களும் , கூடவே வீடு வீடாகப் போயிருக்கிறார் ! கடைசியாகப் பரதேசியின் பலவீனம் ஒன்று , பிள்ளை அவர்களுக்குப் புரிந்து விட்டது . ' கஞ்சா ' குடிப்பது அந்தப் பரதேசியின் வழக்கம் ! பரதேசியின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப ' கஞ்சா ' வைத் தன் கையால் எடுத்துத் தர ஆரம்பித்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ! பல நாட்கள் இப்படிக் கஞ்சா கொடுத்த பிறகு, ஒருநாள் பரதேசி மனம் இரங்கி பிள்ளை அவர்களிடம் பேசியிருக்கிறார் . அதைச் ' சிக் ' கெனப் பிடித்து, பாடத்தைக் ' கஞ்சா ' பரதேசியிடம் தெளிவாகக் கற்றார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை .
--- பொக்கிஷம் , ஆனந்த விகடன் . 14. 04. 2010 .

No comments: